விமான விபத்து: 85 பேர் பலி.. பலர் காயம்..! தரையிறங்கும் போது தடுப்பு சுவரில் மோதி வெடித்தது…!! பதை பதைக்க வைக்கும் வீடியோ..!
181 பயணிகளுடன் தென்கொரிய விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமானம், கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி வெடித்தது. இந்த விபத்தில் குறைந்தது 85 பேர் பலியாகியுள்ளதாக தகவல்.
தாய்லாந்தின் பாங்காங்கில் இருந்து ஜெஜு ஏர் பிளைட் என்ற விமானம் 181 பேருடன், இன்று தென் கொரியாவிற்கு சென்றவுள்ளது. இந்த விமானம் தென்கொரியாவின் ஜியோல்லா மாகாணத்தின் தலைநகரான முவான் சர்வதேச விமான நிலையத்தில், தரையிறங்கும் போது லேண்டிங்க் கியரில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதையில் இருந்து விலகி தடுப்பு சுவரில் மோதி வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் அடுத்த நொடியிலேயே விமானம் முழுவதும் தீ பிடித்து, கரும்புகைகள் வெளியேறியது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
பாங்காக்கில் இருந்து தென்கொரிய வந்த ஜெஜு ஏர் விமானத்தில் 175 பயணிகள், 6 விமான பணியாளர்கள் உட்பட மொத்தம் 181 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்தில் குறைந்தது 85 பேர் பலியாகியுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடந்து வருவதாகும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 33 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. முவான் சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமான நிலையத்தில் ஏற்ப்பட்டுள்ள இந்த விபத்தை பார்த்த அங்கிருந்த பயணிகள் பலர் அச்சமடைந்துள்ளனர். இந்த விபத்து நிகழ்ந்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியாவின் தென் ஜியோல்லா மாகாணத்தில் உள்ள முக்கிய பிராந்திய மையமான தென்மேற்கு கடற்கரை விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி காலை 9:07 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் அதிபர் யூன் சுக் யோல் இராணுவச் சட்டத்தை திணித்து, அதைத் தொடர்ந்து பதவி நீக்கம் செய்யப்பட்டதன் மூலம் பெரும் அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, தென் கொரிய சட்டமியற்றுபவர்கள் தற்காலிக ஜனாதிபதி ஹான் டக்-சூவை பதவி நீக்கம் செய்து அவரது கடமைகளை இடைநிறுத்தி, துணைப் பிரதமர் சோய் சாங்-மோக்கைப் பொறுப்பேற்கச் செய்தார்.
விமான விபத்தையடுத்து, பயணிகள் மற்றும் பணியாளர்களை மீட்பதற்கு கிடைக்கக்கூடிய அனைத்து ஆதாரங்களையும் பயன்படுத்துமாறு அதிகாரிகளுக்கு சோய் உத்தரவிட்டார். மேலும் விபத்து குறித்து விவாதிக்க ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் மூத்த ஜனாதிபதி ஊழியர்களிடையே அவசரக் கூட்டத்திற்கு அவரது தலைமைச் செயலாளர் சுங் ஜின்-சுக் தலைமை தாங்குவார் என்று யூனின் அலுவலகம் தெரிவித்துள்ளது.