மத்திய அரசின் இலவச தடுப்பு...! இந்தியாவில் யானைக்கால் நோயை 2027-ம் ஆண்டிற்குள் ஒழிக்க திட்டம்...!
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல் நிணநீர் யானைக்கால் நோயை ஒழிப்பதற்கான நாடு தழுவிய வெகுஜன மருந்து நிர்வாக (எம்.டி.ஏ) இயக்கத்தின் முதல் கட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்த நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இலவச தடுப்பு மருந்துகளை வழங்குவதன் மூலம் நோய் பரவுவதைத் தடுப்பதை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இயக்கம் 11 மாநிலங்களில் உள்ள 92 மாவட்டங்களை உள்ளடக்கி அடுத்த இரண்டு வாரங்களுக்கு நடைபெறும்.
நிகழ்ச்சியில் பேசிய பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல், உலகளாவிய இலக்குக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவே, 2027-க்குள் யானைக்கால் நோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். உலகில் சில கொடிய நோய்களுக்கு எதிராக இந்தியா மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது என்று அவர் கூறினார்.
யானைக்கால் நோயை ஒழிக்கும் இலக்கை நோக்கிய முன்னேற்றத்தை விரைவுபடுத்த இந்தியா சமீபத்தில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா 2027 ஆம் ஆண்டிற்குள் நிணநீர் யானைக்கால் நோயை ஒழிப்பதற்கான மேம்பட்ட ஐந்து அம்ச உத்தியை 13 ஜனவரி 2023 அன்று தொடங்கி வைத்தார். அதில் முக்கியமான உத்திகளில் ஒன்று இந்த மருந்து இயக்கமாகும்.
அசாம், பீகார், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்கின்றன.