இந்த விதிமுறை கட்டாயம்!… மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு திருத்தப்பட்ட வழிகாட்டுதல்!... மத்திய அரசு அதிரடி!
மருந்து உற்பத்தி தொடர்பான திருத்தப்பட்ட ‘அட்டவணை எம்’ வழிகாட்டுதல்களை ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர மருந்து உற்பத்தி தொழில் நிறுவனங்கள் ‘அட்டவணை எம்’ விதிமுறையை பின்பற்ற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
‘அட்டவணை எம்’ என்பது மருந்துகளின் முறையான உற்பத்தி நடைமுறைகள் தொடர்பான மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டம் 1940ன் ஒரு பிரிவு. இது தர உத்தரவாதத்தினை வலுப்படுத்துவதையும், உலகளாவிய மருந்து உற்பத்தி மையமாக விளங்கும் இந்தியாவின் நன்மதிப்பினை பாதுகாப்பதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிலையில், திருத்தப்பட்ட அட்டவணை எம் வழிகாட்டுதல்களை ஒன்றிய சுகாதார அமைச்சகம் கடந்த மாதம் 28ம் தேதி வெளியிட்டுள்ளது. அதில், ‘தயாரிப்புகளின் தரத்திற்கு உற்பத்தி நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும். மருந்துகள் பயன்பாட்டிற்கு ஏற்றவை, உரிமத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டவை, நோயாளிகளுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என உறுதி அளிக்க வேண்டும். குறிப்பாக உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள மற்றும் உலகளவில் ஏற்றுக் கொள்ளக் கூடிய தரமான மருந்துகளின் உற்பத்தியை உறுதிப்படுத்த வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.
மேலும், ‘மருந்து நிறுவனங்கள் தங்களின் தயாரிப்பு குறைபாடுகள், பாதிப்பு அல்லது தவறான உற்பத்தி காரணமாக மருந்துகளை திரும்பப் பெறும் போது அதுதொடர்பாக உரிமம் வழங்குநருக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. முந்தைய வழிகாட்டுதலில் இந்த அம்சம் இடம் பெறவில்லை. கடந்த சில ஆண்டாக தரமற்ற சில இந்திய மருந்துகளால் வெளிநாடுகளில் உயிர் பலி ஏற்பட்டதைத் தொடர்ந்து இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடைசியாக இச்சட்டத்தில் 2005ல் திருத்தம் செய்யப்பட்டிருந்தது.