ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரப்படும் பெட்ரோல், டீசல்..!! அப்படினா ஒரு லிட்டர் எவ்வளவு இருக்கும்..?
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, 3-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். மோடியுடன், அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்ட பாஜக தலைவர்களும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். அந்த வகையில், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு மீண்டும் பெட்ரோலிய அமைச்சக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவர் அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்தார். இது நடந்தால், எரிபொருளின் உயர்ந்த விலையில் இருந்து மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்று பூரி வலியுறுத்துவது இது முதல்முறை அல்ல.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்தாண்டு நவம்பரில் இதை அமல்படுத்தினால் மக்கள் பயனடைவார்கள் என்று கூறியிருந்தார். எவ்வாறாயினும், பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவர மாநிலங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதையும் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மேற்கோள் காட்டினார். இதற்காக எரிபொருள் மற்றும் மதுபானம் முக்கிய வருவாய் ஆதாரங்கள் ஆகும். தற்போதுள்ள வரி முறையை ரத்து செய்து பெட்ரோல், டீசல் மீதான ஜிஎஸ்டியை அமல்படுத்தினால், அவற்றின் விலை கணிசமாகக் குறையும் என்று கருதப்படுகிறது. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வந்தால், அவற்றின் விலை எவ்வளவு குறையும் என்பதை தற்போது பார்க்கலாம்.
ஜிஎஸ்டி அமலானால் விலைகள் குறையும்:
தற்போது ஜிஎஸ்டியில் வரிகள் 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் என 4 அடுக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளன. எரிபொருளை விலை உயர்ந்த 28 சதவீதத்தில் வைத்திருந்தாலும், பெட்ரோல் விலை தற்போதைய விலையை விட அதிகமாகவே இருக்கும். நாம் மதிப்பிட்டால், டீலர் விலையான ரூ. 55.66க்கு 28% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டால், பெட்ரோலின் சில்லறை விலை ரூ. 72-க்கு வரலாம். அதாவது, பெட்ரோலின் சில்லறை விலை ரூ. 22-23 வரை குறையலாம். மத்திய அரசு கலால் மற்றும் வாட் வரி மூலம் வருமானம் ஈட்டும்போது, மாநில அரசுகள் வாட் வரி விதிப்பதன் மூலம் தங்கள் வருவாயை அதிகரிக்கின்றன.
மாநிலங்களில் பல்வேறு VAT விகிதங்கள் இருப்பதால் பெட்ரோல், டீசல் விலையும் மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடும். டெல்லியில் பெட்ரோல் சில்லறை விலையில் சுமார் ரூ.35 வரி சேர்க்கப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசுக்கு 20 ரூபாயும், மாநில அரசுக்கு 10 ரூபாயும் வருவாய் கிடைக்கிறது. எரிபொருளின் மீதான வாட், மாநிலங்களில் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : இந்த தவறை மட்டும் செய்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்..!! அதிர்ச்சி தகவல்..!!