சீமான் வீட்டின் முன்பு 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு... மீண்டும் பெரியார் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு..
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபத்தில் பெரியார் குறித்து பேசியது தமிழகம் முழுவதும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய சீமான் “ வள்ளலாரை விட பெரியார் என்ன புரட்சி செய்துவிட்டார். தாய் மகளுடன் உறவு வைத்துக் கொள்ள சொன்னவர் தான் பெரியார். அவர் தான் பெண்ணுரிமைக்காக போராடினாரா? பெரியாரும் அம்பேத்கரும் எந்த புள்ளியில் ஒன்றாக இணைகின்றனர்? இருவருக்கும் சிலை வைத்தால் ஒன்றாகிவிடுமா” என்றெல்லாம் பேசியிருந்தார்.
சீமானின் இந்த கருத்துக்கு பெரியார் இயக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக சீமான் மீது காவல் நிலையங்களில் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தந்தை பெரியாரை இழிவுப்படுத்தி பேசிய சீமானின் வீடு இன்று (ஜனவரி 22) முற்றுகையிடப்படும் என்று தந்தை பெரியார் திக, மே 17 இயக்கம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பெரியார் அமைப்புகள் அறிவித்திருந்தன.
இந்த நிலையில் சீமான் வீடு முற்றுகையிடப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டின் முன்பு நாம் தமிழர் கட்சியினர் நள்ளிரவு முதலே குவிந்து வருகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.
இந்த சூழலில் பாதுகாப்பு கருதி சீமான் வீட்டின் முன்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பரபரப்புக்கு மத்தியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான் மீண்டும் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். அப்போது பேசிய அவர் “ பெரியார் குறித்த எனது பேச்சுக்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் போது வழங்குவோம். பெரியார் சொன்னதை நாங்கள் எடுத்து சொல்வது தவறா? அடிப்படையிலேயே பெரியா பிழையானவர். பெரியார் குறித்த என் பேச்சுக்கு திக தலைவர் கி.வீரமணியை பதில் சொல்ல சொல்லுங்கள். தமிழை சனியன் என்று குறிப்பிட்டவர் பெரியார்.” என்று தெரிவித்தார்.
Read More : ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 2 வழக்கு…! இன்று உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு…