”மக்கள் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்கள்”..!! பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்..!!
2024ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நேற்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், “கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டு வருகிறது. பிரதமர் மோடியின் பல்வேறு திட்டங்களால் நாடு பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. வளர்ச்சியின் பலன்கள் ஏழைகளை அடையத் தொடங்கியுள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. எங்களின் வளர்ச்சிப் பணிகளுக்காக மக்கள் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்கள்” என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 10 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் நிலையில், அவரது ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட 2-வது இடைக்கால பட்ஜெட் இதுவாகும். இந்த இடைக்கால பட்ஜெட் மூலம் நாட்டில் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த இரண்டாவது மத்திய நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். முன்னதாக, இந்திய வரலாற்றில் முன்னாள் நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய் மட்டுமே தொடர்ந்து 6 முறை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நபராக இருந்தார். தற்போது அதை சமன் செய்துள்ளார்.