’சென்னை மக்களே’..!! ’இன்று மாலைக்குள் இந்த பிரச்சனை சரியாகிவிடும்’..!! அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி..!!
சென்னையில் இன்று மாலைக்குள் மழைநீரை வடியவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த தொடர் கனமழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியது. சென்னையின் புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதக்கத் தொடங்கின.
பேருந்து போக்குவரத்து முதல் விமானப் போக்குவரத்து வரை அனைத்தும் பாதிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. பல்வேறு பகுதிகளிலும் மின்மோட்டார்கள் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் மின் விநியோகமும் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று மாலைக்குள் அனைத்து பகுதிகளிலும் தேங்கிய மழைநீரை வடியவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மின் விநியோகம் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.