மக்களே உஷார்..!! உங்களை இப்படியும் ஏமாற்றுவார்கள்..!! வங்கிக் கணக்கை பத்திரமா பாத்துக்கோங்க..!!
போலி கூரியர் நிறுவனத்தின் பெயரில் இணையதளம் தொடங்கி ஆயிரக்கணக்கான மக்களை ஏமாற்றிய கும்பல் தற்போது பிடிபட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல போலி இணையதளங்களை உருவாக்கி, சைபர் குற்றவாளிகளுக்கு தரவுகளை விற்றுள்ளனர். இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் டிஎம்டி கம்பிகளை உலக நாடுகளுக்குக் கொண்டுசேர்க்கும் விநியோகஸ்தர்களாக காட்டிக்கொண்டு, போலியான கூகுள் விளம்பரங்களை உருவாக்கி, ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் டெல்லியில் உள்ள சுமார் 100 தொழிலதிபர்களை ஏமாற்றியுள்ளனர்.
பீகாரில் உள்ள நாளந்தாவில் இருந்தும் மற்றொரு முக்கியக் குற்றவாளியான சவுரவ் குமார் (28) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒரு லேப்டாப், 5 ஸ்மார்ட்போன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர் பிரபல கூரியர் நிறுவனங்களின் பெயரில் போலி இணையதளங்களை உருவாக்கி மோசடி செய்துள்ளார். அந்த இணையதளங்கள் மூலம் ஒரு நாளைக்கு சுமார் 300 வாடிக்கையாளர்களின் பெயர் மற்றும் மொபைல் எண்கள் உள்ளிட்ட தரவுகளை சேகரித்து சைபர் குற்றவாளிகளுக்கு விற்பனை செய்தது விசாரணையில் அம்பலமானது.
இது தொடர்பாக அக்டோபர் 18ஆம் தேதி டெல்லியில் உள்ள சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 35 வயதான பெண் வழக்கறிஞர் ஒருவர், கூரியர் டெலிவரி தொடர்பாக தனக்கு போன் செய்து ஏமாற்றியதாக புகார் கொடுத்தார். அவருக்கு லிங்க் அனுப்பப்பட்டதாகவும் அதைக் கிளிக் செய்தவுடன், அவருடைய மொபைல் ஹேக் செய்யப்பட்டு வங்கிக் கணக்கில் இருந்து ரூ.97,970 திருடப்பட்டதாக புகாரில் கூறியிருந்தார்.
பீகார் மாநிலத்தில் உள்ள நாளந்தா, நவாடா ஆகிய இடங்களில் இருந்து இந்த இணையதளங்கள் இயக்கப்பட்டிருப்பது தொழில்நுட்ப விசாரணையில் தெரியவந்தது. 5 நாட்கள் தொடர் சோதனைக்குப் பிறகு, சவுரவ் குமார் கைது செய்யப்பட்டார். டிஎம்டி கம்பி விநியோகஸ்தர்களாக நாடகமாடிது தொடர்பாக தீபக் குமார் (28), ஜிதேந்திர குமார் (32) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள், பாட்னாவின் புறநகரில் உள்ள ஒரு இடத்தில் இருந்து ஒரு குழுவாக செயல்பட்டு வந்துள்ளனர். இரும்பு கம்பிகள் மற்றும் டிஎம்டி பார்களை குறைந்த விலையில் விற்பதாகக் கூறி, ஏமாற்றி வந்துள்ளனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.