மக்களே உஷார்..!! சளி, காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் இந்த மருந்துகள் தரமற்றவை..!! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!
சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கான 67 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளை மத்திய-மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்து வருகின்றன. சமீபத்தில்கூட, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "மருந்து கட்டுப்பாடு துறையின் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்களில் அதிரடியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆய்வுகளில் மருந்துகள் மற்றும் அழகு சாதனச்சட்டம், 1940 மற்றும் மருந்து விதிகள், 1945-ன் கீழ் விதி மீறல்களில் ஈடுபட்ட மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்கள் மீது கடந்த (01.04.2023 - 31.12.2023) 9 மாதங்களில் 219 மருந்து விற்பனை உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் 381 மருந்து நிறுவனங்களில் அதிரடியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்று தெரிவித்திருந்தார்.
அந்தவகையில் இப்போதும் ஆய்வுகள் தொடர்கின்றன. கடந்த மார்ச் மாதத்தில் 931 மருந்துகளின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் சளி, காய்ச்சல், வலி, செரிமான பாதிப்பு, கிருமி தொற்று, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 67 மருந்துகள் தரமற்றவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை மேற்கு வங்கம், இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் தயாரிக்கப்பட்டிருக்கிறதாம்.
அந்த மருந்துகளின் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தனது இணையதளத்தில் (https://cdsco.gov.in) வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்ல, தரமற்ற மருந்துகள் தயாரித்த நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வாரியம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அரசு தரப்பில் அவ்வப்போது எச்சரிக்கப்பட்டு வரும் நிலையில், தரமற்ற மருந்துகளையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருவது பொதுமக்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.