மக்களே உஷார்..!! தொடர் கனமழையால் அதிகரித்த அணையின் நீர்மட்டம்..!! வெள்ள அபாய எச்சரிக்கை..!!
தேனி மாவட்டத்தில் வைகை அணை, மஞ்சலாறு அணை, சண்முகா நதி அணை, சோத்துப்பாறை அணை, முல்லை பெரியாறு அணை ஆகியவை முக்கிய நீராதாரங்களாக அமைந்துள்ளன. ஆண்டிப்பட்டி செல்லும் வழியில் வைகை ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை வைகை அணையின் நீரை கொண்டு மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் விவசாயம் நடைபெறுகிறது.
தற்போது வைகையின் மொத்த உயரம் 71 அடியாக இருந்த போதும், அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டும் போது முழு கொள்ளளவை எட்டியதாக கணக்கிடப்படுகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை வைகை அணையின் நீர்மட்டம் 65 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 885 கன அடி இருந்தது. தேனி மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணி முதல் இரவு வரை தொடர் கனமழை பெய்தது. குறிப்பாக, மூலவைகை ஆறு, முல்லைப் பெரியாறு, கொட்டக்குடி ஆறு ஆகிய ஆறுகளில் இருந்து அதிகப்படியாக வந்த நீர்வரத்தால் வைகை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வரை அதிகரித்துள்ளது.
இதனால் வைகை அணையின் நீர்மட்டம் நேற்று மதியம் 3 மணியளவில் 66.01 அடியை எட்டியது. இதனால் அணையில் இருந்து அபாய ஒலி ஒரு முறை ஒலிக்கப்பட்டு, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.