மக்களே உஷார்..!! மின்னல் தாக்கியதில் 20-க்கும் மேற்பட்டோர் பலி..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!
குஜராத்தில் பருவம் தவறி பெய்து வரும் தொடர் மழையால் மின்னல் தாக்கியதில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பருவம் தவறிய மழை பெய்து வருகிறது. திங்கட்கிழமையுடன் மழை சற்றே குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள போதும், மாநிலத்தின் தெற்குப் பகுதிகள் மற்றும் சௌராஷ்டிரா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தொடர் கனமழையால், பல்வேறு இடங்களில் மின்னல் தாக்கியதில் இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், மழை தொடர்ந்து வருவதால் பல இடங்களில் பயிர்களும் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. இது தொடர்பாக தனது எக்ஸ் தள பதிவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ”மோசமான வானிலை காரணமாக மின்னல் தாக்கியதில் ஏராளமானோர் உயிரிழந்திருப்பதை அறிந்து மிகவும் வருத்தம் அடைகிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். படுகாயம் அடைந்தவர்களை மீட்பதற்காக உள்ளூர் நிர்வாகம் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார். மழை மேலும் சில நாட்கள் தொடரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பொதுமக்கள் மழைக்காலங்களின் போது வெட்டவெளிகள், மரங்களுக்கு கீழ் உள்ளிட்ட இடங்களில் நிற்க வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதற்கிடையே, தொடர் மழையால் பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதால் உரிய இழப்பீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.