மன்னிப்பு கேட்ட IRCTC..! வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட தயிரில் பூஞ்சை!…
IRCTC: வந்தே பாரத் ரயில் சென்ற பயணிக்கு பரிமாறப்பட்ட தயிரில் பூஞ்சை இருந்த சம்பவத்தால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தொலைதூர பயணங்களுக்காக பொதுமக்கள் அதிகளவில் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இதனால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அதனடிப்படையில், ரயில்களில் உணவுகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், பயணிக்கும் இடங்களில் உணவு வகைகள் எப்படியிருக்குமோ என்கிற பாதுகாப்பு கருதியும் தான் பலரும் ரயிலில் உணவு வகைகளை ஆர்டர் செய்கிறார்கள். ஆனால், பெரும்பாலான சமயங்களில் ரயில் உணவுகள் உயிருக்கு உலை வைப்பதாகவே இருக்கின்றன.
தண்ணீர் பாட்டில்களில், தரமில்லாமல் பிடிக்கும் வீடியோ, கேண்டீனில் உணவுப் பொருட்களின் மீது எலி ஓடுவது என்று அவ்வப்போது ரயில் உணவுகள் குறித்த வீடியோக்கள் வெளியாகி பதைபதைக்க செய்கிறது. இந்நிலையில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் டேராடூனிலிருந்து புது தில்லிக்கு (ஆனந்த் விஹார்) பயணித்த ஒருவருக்கு பூஞ்சை கலந்த தயிர் பரிமாறப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பயணி ஹர்ஷத் டோப்கர் ட்விட்டரில் புகார் செய்தார். ரயில்வே அமைச்சகம், வடக்கு ரயில்வே மற்றும் ரயில்வே அமைச்சரின் அதிகாரப்பூர்வ கணக்குகள் குறிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக அந்த பயணி தனது எக்ஸ் தளத்தில், நான் டெஹ்ராடூனில் இருந்து ஆனந்த் விஹாருக்கு எக்சிக்யூட்டிவ் வகுப்பில் வந்தே பாரதத்தில் பயணம் செய்தேன். பரிமாறப்பட்ட தயிரில் பூஞ்சை இருந்தது. வந்தே பாரத் ரயிலில் இதை எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.ரயில்வேயின் அதிகாரப்பூர்வ கணக்கு ரயில்வே சேவா (@railwayseva) அரை மணி நேரத்தில் பதிலளித்தது. இதற்கிடையில், "உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என்று IRCTC கூறியது.
உடனடியாக ரயிலில் இருந்த மேற்பார்வையாளர் இந்த விஷயத்தில் தலையிட்டு தயிர் மாற்ற ஏற்பாடு செய்தார். பேக்கேஜ் செய்யப்பட்ட தயிர் அதன் காலாவதி தேதிக்குள் இருந்தது. ஆனால், உள்ளே இருக்கும் தயிர் கெட்டுப் போய்விட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ரயில்வே தெரிவித்துள்ளது.