கார் கழுவுவதற்கு குடிநீர் பயன்படுத்தினால் அபராதம்... எங்கு தெரியுமா?
காவிரி குடிநீர் மற்றும் போர்வெல் தண்ணீரை கார் கழுவுவதற்கு பயன்படுத்தினால் அபாரதம் விதிக்கப்படும் என பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB) எச்சரித்துள்ளது.
கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு தலைத்தூக்கியுள்ளது. குடிநீர் பஞ்சம் வராமல் தடுக்க, கடந்த மார்ச் 10ஆம் தேதி பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB) ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், குடிநீரைப் பயன்படுத்தும் ஒவ்வொரு விதி மீறலுக்கும் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. குறிப்பாக கார் கழுவுதல், தோட்டம் அமைத்தல் மற்றும் பெரிய கட்டுமானத் திட்டங்கள் உள்ளிட்டவைகளுக்கு குடிநீர் கட்டாயமாக பயன்படுத்தக்கூடாது என அறிவித்திருந்தது.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களில், காவிரி தண்ணீர் மற்றும் போர்வெல் தண்ணீரை கார் கழுவுவதற்கு பயன்படுத்தியதாக பொதுமக்களிடம் இருந்து ரூ.1.1 லட்சத்தை அபராதமாக பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB) வசூலித்துள்ளது.
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள், நகரின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போதிய மழை பெய்யாததால், தற்போது பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடத் தொடங்கியுள்ளது. பெங்களூருவின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய கேஆர்எஸ் மற்றும் கபினி நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக நீர்வளத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.