Paytm தடை!… ஒரே பான் எண்ணில் 1000க்கும் மேற்பட்டோர் வங்கி கணக்கை இணைத்ததே காரணம்!
வங்கியில் ஒழுங்கற்ற கே.ஒய்.சி., விதிகளால் மேற்கொள்ளப்பட்ட பல கோடி ரூபாய் பணப் பரிமாற்றங்கள் மற்றும் ஒரே பான் எண்ணில் 1000க்கும் மேற்பட்ட பயனர்கள் தங்களது வங்கி கணக்கை இணைத்தே பேடிஎம்(Paytm) தடைக்கான காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளன.
ரிசர்வ் வங்கி பேடிஎம் நிறுவனத்தின் துணை நிறுவனமான பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மீது தடை விதித்துள்ள நிலையில், இந்தியாவின் மிக முக்கிய டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனத்தில் ஒன்றான paytm, பெரும் சிக்கலில் உள்ளது. ரிசர்வ் வங்கியின் விதிகளை கடைபிடிக்காத காரணத்தால், இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட உத்தரவின்படி, 2024 பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் பேமெண்ட் லிமிடெட் வங்கியில் எந்தவித செயல்பாடுகளும் நடைபெறாது. அதாவது பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு, பேடிஎம் கணக்குகளில் பணத்தை செலுத்தவோ, பணத்தை வரவு வைக்கவோ அல்லது அந்த கணக்கின் மூலம் பண பரிவர்த்தனை செய்வது என்பது இயலாது.
பேடிஎம் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், அதில் உள்ள பணத்தை பெற்றுக் கொள்ளலாம். வங்கி கணக்கில் வாடிக்கையாளர்கள், சேமிப்பு கணக்குகள், சுங்கச்சாவடி கட்டணத்திற்கான ஃபாஸ்ட் டாகுங்கள் உட்பட பிற சேவைகளுக்கான கணக்குகளில் பணத்தை திரும்ப எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பேடிஎம் தடைவிதிக்கப்பட்டதற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, ஒழுங்கற்ற கே.ஒய்.சி., விதிகளால் மேற்கொள்ளப்பட்ட பல கோடி ரூபாய் பணப் பரிமாற்றங்களே இதற்கு காரணம். 1,000க்கும் மேற்பட்ட பயனர்கள் ஒரே பான் கார்டு எண்ணை தங்கள் வங்கிக் கணக்குகளுடன் இணைத்துள்ளனர். இது, சட்ட விரோத பணப் பரிமாற்றம் குறித்த கேள்விகளை எழுப்பியது.
ரிசர்வ் வங்கியும், தணிக்கையாளர்களும் இதுகுறித்து சரிபார்க்கும்போது, பேடிஎம் வங்கி சமர்ப்பித்த தகவல்கள் பல இடங்களில் தவறாக இருப்பது கண்டறியப்பட்டது. குழுமத்தினுள் மற்றும் குழுமத்துக்கு தொடர்புடையவர்களுக்குள் நடந்த முக்கிய பரிவர்த்தனைகளை வெளியிடாதது குறித்த சந்தேககங்களும் எழுந்தன. மேலும், தாய் நிறுவனமான 'ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ்' நிறுவனத்துடனான தொடர்பின் அடிப்படையில், பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் நிர்வாகத்தில் சில விதிமீறல்கள் இருப்பதையும் ரிசர்வ் வங்கி கண்டறிந்தது. தாய்நிறுவனத்தின் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகள், தரவு காப்பு குறித்த கவலைகளையும் எழுப்பியது. இவை தான் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு அடிப்படை காரணங்களாக அமைந்ததாக அதிகாரிகள் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.