சென்னை திரும்பும் பயணிகளே.. கடைசி நேரத்தில் டிக்கெட் கன்பார்ம் ஆகலையா? ரயில்வே-யின் சூப்பர் அறிவிப்பு
தீபாவளி பண்டிகை கடந்த வியாழக்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும் சிறப்பு பேருந்துகளை தமிழக அரசின் போக்குவரத்து கழகம் இயக்கியது. இரயில்களின் டிக்கெட் விற்று காலியானது.
இந்த நிலையில் தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக்க மதுரையிலிருந்து சென்னைக்கு முதல் முறையாக மெமு ரயில் சேவை இயக்கப்படுகிறது. தீபாவளி விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க மதுரை - சென்னை இடையே முன்பதிவில்லாத பெட்டிகள், கழிப்பறை வசதியுடன் கூடிய ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) இரவு இயக்கப்பட இருக்கிறது. அதன்படி மதுரை - தாம்பரம் முன்பதிவு இல்லாத மெமு ரயில் (06100) மதுரையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) இரவு 07.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
முன்னதாக இந்த ரயில் சேவை (06099) சென்னையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) காலை 10.15 மணிக்கு புறப்பட்டு மாலை 06.30 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த ரயில்கள் சோழவந்தான், திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சென்னை - மதுரை மெமு ரயில் தாம்பரம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கு வழக்கமான இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லாத பயண கட்டணம் வசூலிக்கப்படும்.
Read more ; பச்சை பால் குடிக்கிறீர்களா? பக்க விளைவுகள் ஏற்படும்.. நிபுணர்கள் எச்சரிக்கை!!