பெரும் சோகம்!. தீவிபத்து வதந்தியால் ரயிலில் இருந்து கீழே குதித்த பயணிகள்!. எதிரே வந்த ரயில் மோதி பலர் பலி!.
Train Accident: ஜார்க்கண்டில் உள்ள குமண்டி ரயில் நிலையம் அருகே, ராஞ்சி-சசரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் தீ விபத்து ஏற்பட்டதைக் கேள்விப்பட்டு தண்டவாளத்தில் குதித்த பயணிகள் மீது எதிரே வந்த மற்றொரு சரக்கு ரயில் மோதியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் குமண்டி ரயில் நிலையம் அருகே, இரவு 8 மணி அளவில் ராஞ்சி-சசரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜினில் தீபிடித்ததாக பயணி ஒருவர் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, நபர் ஒருவர் ஸ்டேஷன் மாஸ்டருக்கு போன் செய்து, ரயிலில் தீப்பற்றிய தகவல் தெரிவித்தார். பின்னர் ஸ்டேஷன் மாஸ்டர் ரயிலை நிறுத்தினார், இது பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியது. இந்த தகவல் காட்டுத்தீப்போல் பயணிகளிடையே பரவியதையடுத்து, சிலர் ரயிலில் இருந்து தண்டவாளத்தில் குத்தித்துள்ளனர். அப்போது, மறுபுறம் எதிர் திசையில் சென்ற சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பயணிகள் உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுப்பிவைத்தனர். விசாரணையில் ரயிலில் தீ பிடிக்கவில்லை என்பது உறுதியானது, மேலும் இந்த செயல் நக்சலைட்டுகளின் சூழ்ச்சியா என்பது உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.