நாகை - காங்கேசன் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை!
நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே சரியாவாணி என்ற கப்பல் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிய கப்பல் இயக்கப்பட உள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாகையிலிருந்து இலங்கைக்கு செரியபாணி என்ற கப்பலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஆனால் மழை காரணமாக இந்த கப்பல் சேவை ஒரே வாரத்தில் ரத்து செய்யப்பட்டது என்றும் இந்த கப்பலில் போதுமான பயணிகள் பயணம் செய்யவில்லை எனவும் கூறப்பட்டது.
பின்னர் மழை புயல் என தொடர்ந்ததால் சுமார் ஆறு மாதத்திற்கு மேலாக இந்த கப்பல் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நாகை இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் கப்பல் சேவை தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போது மீண்டும் நாகை இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் மே 13ஆம் தேதி முதல் நாகை - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே செரியாபானி என்ற கப்பல் நாகை இலங்கை இடையே இயக்கப்பட்ட நிலையில் தற்போது சிவகங்கை என்ற பெயரில் புதிய கப்பல் இயக்கப்பட உள்ளது.
இந்த கப்பல் அந்தமான் துறைமுகத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலின் கீழ் தளத்தில் 133 இருக்கைகளும் மேல் தளத்தில் 25 இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கீழ் தளத்தில் உள்ள இருக்கைகளில் பயணிக்க ஜிஎஸ்டி வரிவுடன் சேர்த்து 5000 ரூபாயும் மேல் தளத்தில் உள்ள சிறப்பு வகுப்பில் பயணிக்க ஜிஎஸ்டி வரி உடன் சேர்த்து 7000 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் அந்தமானிலிருந்து வரும் மே 10 ஆம் தேதி நாகை துறைமுகம் வர உள்ளது. சமீபத்தில் இலங்கை அரசு, தங்கள் நாட்டிற்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவை இல்லை என அறிவித்தது. இதனால் நாகை - இலங்கை இடையே கப்பல் சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெறும் பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிகிறது.