2026-ல் த.வெ.க தலைவர் விஜய் தான் முதல்வர்... பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சூளுரை..!
2026-ல் த.வெ.க தலைவர் விஜய் தான் முதலமைச்சர் என கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி அருகே வி.சாலை பகுதியில் அக்டோபர் 27-ஆம் தேதி த.வெ.க கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. மாநாடு குறித்து மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. மாநாட்டு குறித்த முக்கிய முடிவுகளும், முன்னேற்பாடுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய த.வெ.க கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் , "அக்டோபர் 27-ம் தேதி நடைபெறும் த.வெ.க-வின் முதல் மாநாட்டில் பெண்கள்தான் அதிகமாக பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் மாநாடு வெற்றி மாநாடாக இருக்கும், அதில் எந்த சந்தேகமும் இல்லை. காவல்துறையின் விதிமுறைகளைப் பின்பற்றி ஒழுக்கத்துடன் இந்த மாநாடு நடைபெறும் என்று எதிர்பார்க்கிறேன். நம்முடைய இலக்கு 2026 தான். 2026-ல் த.வெ.க தலைவர் விஜய் தான் முதலமைச்சர். தளபதி என்றால் அது நம்முடைய தலைவர் ஒரே ஒருவர்தான் என்றார்.
த.வெ.க தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை:
நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வருகின்ற அக்டோபர் மாதம் 27-ம் தேதி, மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம். விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.