’கூட்டணி முறியவில்லை’..!! ’பாஜகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை’..!! ஓபிஎஸ் பரபரப்பு தகவல்..!!
பாஜகவும் நாங்களும் ஒரே கூட்டணியில் தான் இருக்கிறோம். அந்த கூட்டணி முறியவே இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தீவிரமாக நடத்தி வருகிறது. சமீபத்தில் திமுக - காங்கிரஸ் இடையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், பிப்ரவரி 3 ,4ஆம் தேதிகளில் கூட்டணி கட்சியில் உள்ள மற்ற கட்சிகளுடன் திமுக ஆலோசனை நடத்த உள்ளது. அதன்படி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகளுடன் திமுக கூட்டணி குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளனர்.
இன்னொரு பக்கம் அதிமுகவும் கூட்டணி ஆலோசனைகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், பாஜக மூன்றாவது அணியை தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பாஜக + ஓ பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் + பாரி வேந்தரின் ஐஜேகே + மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து மூன்றாவது கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தான், பாஜகவும் நாங்களும் ஒரே கூட்டணியில் தான் இருக்கிறோம். அந்த கூட்டணி முறியவே இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸுக்கு இரட்டை இலை மற்றும் அதிமுக பெயரை பயன்படுத்தும் உரிமை இல்லை. இந்நிலையில், பாஜகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இருப்பதாக அவர் கூறியிருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது.