பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா!. இன்று கோலாகல தொடக்கம்!. 10,741 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு!
Paris Olympics: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33-வது ஒலிம்பிக் திருவிழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது. தொடக்க விழா இந்திய நேரப்படி இன்று இரவு 11.30 மணிக்கு நடைபெறவுள்ளது ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 206 நாடுகளை சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். வழக்கமாக மைதானத்தில் நடக்கும் தொடக்க விழாவில் அந்தந்த நாட்டின் வீரர்கள், வீராங்கனைகள் தேசியக் கொடியுடன் பேரணியாக நடந்து வருவார்கள். ஆனால் பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழா செய்ன் நதியில் திட்டமிடட்டப்பட்டுள்ளது.
இதனை சுமார் 6 லட்சம் பேர் நேரில் பார்க்கும் வகையில் பிரான்ஸ் அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது. சுமார் 6 கிமீ தூரம் வரை படகில் விளையாட்டு வீரர்கள் பயணிக்கவுள்ளனர். 42 வகையான விளையாட்டுகளில், 329 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. பாரிஸ் ஒலிம்பிக்கில் ஸ்கேட் போர்டிங், பிரேக்கிங், சர்ஃபிங், ஸ்போர்ட் க்ளைம்பிங் ஆகிய 4 விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவை பொருத்தவரை 16 வகையான விளையாட்டுகளில் 112 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். (மொத்தம் 117 பேர் கொண்ட அணியில் 5 பேர் மாற்று வீரர்கள்.)
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கத்திற்கான தேடலைத் தொடங்க 117 பேர் கொண்ட வலுவான இந்திய வீரர்கள் குழுவானது பிரான்ஸ் சென்றடைந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ராவின் தங்கம் உட்பட 7 பதக்கங்களுடன் இந்திய அணி திரும்பியது.
தமிழ் நாட்டிலிருந்து செல்லும் வீரர்கள் தடகளம், துப்பாக்கிச்சுடுதல், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பாய்மர படகுப்போட்டி என 5 வகையான விளையாட்டுகளில் தெரிவாகியுள்ளனர். அதிலும் குறிப்பாக ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாட்டிலிருந்து துப்பாக்கிச் சுடும் பிரிவில் பிரித்விராஜ் தொண்டைமான் என்பவர் தெரிவாகியுள்ளார்.
அதேபோல் ஒலிம்பிக் போட்டிகளை இந்திய ரசிகர்கள் நேரலையில் பார்க்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஸ்போர்ட்ஸ் 24 தொலைக்காட்சி நிறுவனம் ஒலிம்பிக் போட்டிகளை நேரலை செய்யவுள்ளது. ஸ்போர்ட்ஸ் 24 தொலைக்காட்சி ஏற்கனவே தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகி வருகின்றன. இதனால் ரசிகர்கள் தங்களின் சொந்த மொழியிலேயே காண முடியும்.
Readmore: மக்களே..!! இந்த தேதி தான் கடைசி..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!! இனி வாய்ப்பு கிடையாதாம்..!!