முதல் நாளிலே முடங்கிய நாடாளுமன்றம்!. அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி!
Parliament: நாடாளுமன்றத்தில் அதானி விவகாரத்தில் விவாதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால், இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே இரு அவைகளும் முடங்கின.
இன்று அரசியலமைப்பு 75ம் ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து நாடாளுமன்றம் மீண்டும் நாளை கூடும். பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் 20ம் தேதி வரை நடக்க உள்ள இக்கூட்டத்தொடரில் பங்கேற்கும் முன்பாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடந்தது. இதில், திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், நாசிர் ஹூசேன், மாணிக்கம் தாக்கூர் உள்ளிட்ட பல்வேறு கட்சி எம்பிக்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், சூரிய ஒளி மின்சக்தி ஒப்பந்தங்களை பெற அதானி குழுமம் இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து அவையில் விவாதம் நடத்த வேண்டும், இதில் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென நாடாளுமன்றத்தில் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது. அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்து விட்டு, அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென ஏற்கனவே அனைத்துக்கட்சி கூட்டத்திலும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி இருந்தன. மேலும், மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட பல எம்பிக்கள் இரு அவையிலும் ஒத்திவைப்பு தீர்மானமும் கொடுத்திருந்தனர்.
இந்நிலையில், மக்களவை காலையில் கூடியதும், மறைந்த எம்பிக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. உடனடியாக, அதானி விவகாரத்தில் விவாதம் நடத்த வேண்டுமெனவும், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். மேலும், உபியின் சம்பல் பகுதியில் மசூதி ஆய்வுக்கு அதிகாரிகள் சென்றதால் ஏற்பட்ட எதிர்ப்பில் 4 பேர் பலியான சம்பவத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை அவைத்தலைவராக இருந்த பாஜ எம்பி சந்தியா ராய் ஏற்க மறுத்தார். இதனால் இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். கூச்சல், குழப்பம் காரணமாக, பிற்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அவை கூடியதும் அமளி தொடர்ந்தது. இதனால், நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. இதே போல, மாநிலங்களவை காலையில் கூடியதும், அதானி விவகாரத்தில் வழங்கப்பட்ட 7 ஒத்திவைப்பு தீர்மானங்கள் உட்பட 13 தீர்மானங்களை நிராகரிப்பதாக அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்தார்.
ஆனாலும், ‘இது தேச நலன் சார்ந்த விவகாரம் என்பதால் கட்டாயம் விவாதம் நடத்த வேண்டும், நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என அவையின் எதிர்க்கட்சி தலைவரான கார்கே வலியுறுத்தினார். இதை ஏற்க மறுத்த அவைத்தலைவர் தன்கர் 11.45 மணி வரை அவையை ஒத்திவைத்தார். அதன் பிறகு அவை கூடிய போதும், அமளி அடங்காததால் மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலே அதானி விவகாரம் இரு அவைகளிலும் புயலை கிளப்பி உள்ளது.