பாராலிம்பிக்!. ஒரே நாளில் 2 தங்கம் உட்பட 8 பதக்கங்களை தட்டித்தூக்கிய இந்தியா!. புள்ளிப்பட்டியலில் அசத்தல் முன்னேற்றம்!
Paralympics 2024: பாரிஸ் பாராலிம்பிக் போட்டியின் பெண்கள் ஒற்றையர் SH6 போட்டியில் இந்திய வீராங்கனை நித்யா ஸ்ரீ சிவன் வெண்கலப் பதக்கத்தை வென்றார். முதல் நிலை வீராங்கனையான நித்யா 21-14 மற்றும் 21-6 என்ற நேர் கேம்களில் இந்தோனேசியாவின் ரினா மார்லினாவை மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் தோற்கடித்தார். 2022 உலக சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கம் வென்ற ரினாவை விட நித்யா ஸ்ரீ புள்ளிகளில் அதிகமாக இருந்தார்.
போட்டியின் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய நித்யா இந்தோனேசிய வீராங்கனையை வெறும் 23 நிமிடங்களில் வீழ்த்தி வெற்றி பெற்றார். முதல் கேமை 21-14 என்ற கணக்கில் கைப்பற்றிய அவர், இரண்டாவது ஆட்டத்தில் தனது ஆட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார்.
பாட்மின்டன் ஒற்றையர் (எஸ்.எல்.3) பைனலில் 'நம்பர்-1' வீரரான நிதேஷ் குமார், பெத்தேல் டெனியலை (நம்பர்-2) சந்தித்தார். முதல் செட்டை நிதேஷ் 21-14 என எளிதாக வென்றார். அடுத்த செட்டை 18-21 என கோட்டை விட்டார். மூன்றாவது செட்டில் ஒரு கட்டத்தில் 20-21 என பின் தங்கினார். பின் அடுத்தடுத்து 2 புள்ளி எடுத்த நிதேஷ், 23-21 என கைப்பற்றினார். முடிவில் நிதேஷ் 21-14, 18-21, 23-21 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் (எப்.64) போட்டியில் இந்தியாவின் சுமித் அன்டில், சந்திப், சஞ்சய் களமிறங்கினர். இரண்டாவது வாய்ப்பில் அதிகபட்சம் 70.59 மீ., துாரம் எறிந்த சுமித், முதலிடம் பெற்று, தங்கப்பதக்கம் தட்டிச் சென்றார். ஏற்கனவே இவர், டோக்கியோ பாராலிம்பிக்கிலும் தங்கம் வென்றிருந்தார். தவிர, பாரிஸ் பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த 3வது தங்கம் ஆனது இது. முன்னதாக துப்பாக்கிசுடுதலில் அவனி லெஹரா, தங்கம் கைப்பற்றி இருந்தார். இந்தியாவின் மற்ற வீரர்கள் சந்திப் (62.80), சஞ்சய் (58.03) 4, 7வது இடம் பிடித்தனர்.
பெண்களுக்கான எஸ்.யு.,5 பிரிவு ஒற்றையர் பைனலில் தமிழகத்தின் துளசிமதி முருகேசன், சீனாவின் குயு ஜியாவை சந்தித்தார். இதில் துளசிமதி 17-21, 10-21 என்ற கணக்கில் தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இதே பிரிவில் நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் மணிஷா ராமதாஸ், 21-12, 21-8 என நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். ஆண்களுக்கான வட்டு எறிதல் பைனல் நேற்று நடந்தது. இந்திய வீரர் யோகேஷ் கதுனியா, முதல் வாய்ப்பில் 42.22 மீ., துாரம் எறிந்து, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். ஏற்கனவே, டோக்கியோ பாராலிம்பிக்கில் (2021) யோகேஷ் வெள்ளி வென்று இருந்தார்.
ஆண்கள் ஒற்றையர் பாட்மின்டன் பைனலில் (எஸ்.எல்.4) இந்தியாவின் சுஹாஸ் யத்திராஜ், 9-21, 13-21 என பிரான்சின் லுகாசிடம் தோற்று, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். வில்வித்தை கலப்பு இரட்டையர் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் ராகேஷ் குமார், ஷீத்தல் தேவி ஜோடி, இத்தாலியின் சார்டி, மட்டேவு ஜோடியை சந்தித்தது. இதில் 156-155 என 'திரில்' வெற்றி பெற்ற இந்திய ஜோடி, வெண்கலம் வசப்படுத்தியது.
அந்தவகையில், ஞாயிற்றுக்கிழமை முடிவின்படி 7 பதங்களுடன் இருந்த இந்தியா, திங்கள் கிழமை முடிவில் (நேற்று) ஒரே நாளில் 2 தங்கப்பதக்கம் உட்பட 8 பதக்கங்களை கைப்பற்றியதன்மூலம் இதுவரை 15 பதக்கங்களை தட்டிச்சென்றது. அதாவது, 5 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களுடன் 15வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.