பாராலிம்பிக்!. இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி, வெண்கலம்!. வரலாற்று சாதனை படைத்த ப்ரீத்தி பால்!. ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து!
Paralympics: ஞாயிற்றுக்கிழமை நடந்த பாராலிம்பிக்ஸில் தடகள வீராங்கனை ப்ரீத்தி பால் வெண்கலம் மற்றும் மற்றும் உயரம் தாண்டுதல் வீரர் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பாரிஸ் பாராலிம்பிக்கில் ஆடவர் உயரம் தாண்டுதலில் டி-47 போட்டியில் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதேபோல், பெண்களுக்கான 200 மீட்டர் டி35 போட்டியில் பிரீத்தி பால் 30.01 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார். முன்னதாக பிரீத்தி பால் பெண்களுக்கான 100 மீட்டர் டி35 போட்டியில் வெண்கலம் வென்றார். இதன்மூலம், பிரீத்தி பால் தனது இரண்டாவது வெண்கலத்தை பெற்றார். பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில் பாரா ஒலிம்பிக்கில் இரண்டாவது வெண்கலப் பதக்கம் வென்ற பிரீத்திக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள பதிவில், "பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் மகளிர் 200 மீ - டி35 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பிரீத்தி பாலுக்கு வாழ்த்துகள். 100 மீட்டர் வெண்கலப் பதக்கத்திற்குப் பிறகு, பாரா ஒலிம்பிக்கில் அவர் வென்ற இரண்டாவது பதக்கம் இதுவாகும், இது ஒரு விதிவிலக்கான சாதனையாகும்.
இந்தியாவுக்கான இரண்டு பாரா தடகளப் பதக்கங்களையும் அவர் வென்றுள்ளார். அவரை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது. மூவர்ணக் கொடி போர்த்தி அவர் எடுத்த புகைப்படங்கள் விளையாட்டு பிரியர்களை மின்னச் செய்தன. அவர் இளைஞர்களிடையே விளையாட்டு கலாச்சாரத்தை வலுப்படுத்தி, இந்தியாவுக்காக அதிக பாராட்டுகளை வெல்வார்" என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "பாரா ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 200 மீ டி35 போட்டியில் வெண்கலம் வென்று, ஒரே தொடரில் இரண்டாவது பதக்கம் பெற்று, பிரீத்தி பால் ஒரு வரலாற்று சாதனை படைத்துள்ளார். அவர் இந்திய மக்களுக்கு ஒரு உத்வேகம். அவருடைய அர்ப்பணிப்பு உண்மையிலேயே குறிப்பிடத்தக்கது" என்று தெரிவித்துள்ளார்.
Readmore: வரும் நவம்பர் 10-ம் தேதி… ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…! முழு விவரம்