பாராலிம்பிக்!. துப்பாக்கிசுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம்!. ஏமாற்றமளித்த ஷீத்தல், சரிதா!
Paralympics: பாரிசில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக் துப்பாக்கிசுடுதல் போட்டியில் இந்தியாவின் ருபினா பிரான்சிஸ் வெண்கலப் பதக்கம் வென்றார்.
பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. அந்தவகையில், நேற்று பெண்களுக்கான 10 மீ., ஏர் பிஸ்டல் எஸ்.எச்.1 பிரிவில் தகுதிச்சுற்று நடந்தது. 20 பேர் பங்கேற்றனர். இந்தியா சார்பில் ருபினா பிரான்சிஸ் 25, பங்கேற்றார். துவக்கத்தில் இருந்து பின்தங்கினார் ருபினா. 45 ஷாட் முடிவில் முதன் முறையாக 'டாப்-10' பட்டியலில் இடம் பிடித்தார். இதன் பின் சிறப்பாக செயல்பட்டார் ருபினா. கடைசி 2 'ஷாட்டில்' அசத்திய இவர், மொத்தம் 556 புள்ளி எடுத்தார். 6வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தார்.
8 பேர் பங்கேற்ற பைனலில் முதல் 10 'ஷாட்' முடிவில் நான்காவது இடம் பிடித்தார். தொடர்ந்து அடுத்தடுத்து அசத்திய இவர், 211.1 புள்ளி எடுத்து, மூன்றாவது இடம் பெற்று, வெண்கலப் பதக்கம் வசப்படுத்தினார். 'பிஸ்டல்' பிரிவில் பாராலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை ஆனார் ருபினா. பாட்மின்டன் ஆண்கள் ஒற்றையர் 'பி' பிரிவில் சுகந்த் கடம், 21-12, 21-12 என தாய்லாந்தின் சிரிபாங்கை சாய்த்து, அரையிறுதிக்கு முன்னேறினார்.
மேலும், இதே பிரிவில் ஏற்கனவே இந்தியாவின் சுஹாஸ் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இதனால் பாட்மின்டனில் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் உறுதியானது. பாரிஸ் பாராலிம்பிக்கில் இதுவரை இந்தியா, 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கம் கைப்பற்றியுள்ளது.
பெண்களுக்கான வில்வித்தை தனிநபர் காம்பவுண்டு பிரிவில் உலகின் 'நம்பர்-1' வீராங்கனை, இந்தியாவின் 17 வயது ஷீத்தல் தேவி, 'ரவுண்டு-16' சுற்றில், சிலியின் மரியானாவை சந்தித்தார். முதல் செட்டில் 29-28 என முந்தினார் ஷீத்தல். கடைசியில் ஷீத்தல் தேவி 137-138 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் சரிதா, இத்தாலியின் சார்தி எலியனோராவை சந்தித்தார். இதில் சரிதா 141-135 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். இதில் துருக்கியின் கிர்டியை சந்தித்தார். சரிதா 135-141 என்ற கணக்கில் தோல்வியடைந்தது வெளியேறினார்.
Readmore: கர்ப்பிணி பெண்களுக்கு செம அறிவிப்பு..!! ஆதார் கட்டாயமில்லை..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!