'பப்புவா நியூ கினியா நிலச்சரிவில் உயிருடன் புதைந்த 2,000 பேர்!'- வெளியான அதிர்ச்சி தகவல்!
பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியதாக ஐ.நா., கூறியுள்ளது.
தென் மேற்கு பசுபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. காகலம் மலை கிராமத்தில் நேற்று முன்தினம்( மே 24) நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் தூங்கிக்கொண்டு இருந்த மக்கள் அதில் சிக்கினர். 1200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகின. கிராமத்திற்கு செல்லும் சாலையும் பாதிக்கப்பட்டதால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியதாக ஐ.நா., கூறியுள்ளது.
இது குறித்து பப்புவா நியூ கினியா பேரிடர் மீட்புக் குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "இந்த பெரும் நிலச்சரிவு 2,000 க்கும் மேற்பட்ட மக்களை உயிருடன் புதையுண்டு, பெரும் அழிவை ஏற்படுத்தியிருக்கிறது. நிலச்சரிவு தொடர்ந்து மெதுவாக நிகழ்ந்துகொண்டிருப்பதால் நிலைமை இன்னும் சீராகவில்லை. அதனால் மீட்புக் குழுக்களுக்கும் ஆபத்தான சூழலே நிலவுகிறது. நிலச்சரிவில் சிக்கியவர்களின் உடல்கள் 20 முதல் 26 அடி ஆழ இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டு வருகிறது.
ஏராளமான வீடுகள் சரிந்து விழுந்திருப்பதால், அதில் தூங்கிக்கொண்டிருந்த மக்களையும் மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், இனி நிலச்சரிவில் சிக்கியவர்களை உயிருடன் மீட்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளது. கட்டடங்கள், விவசாய தோட்டங்கள் அழிந்தததின் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது." எனத் தெரிவித்திருக்கிறது.