பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு..!! 14 காளைகளை அடக்கி முதல் பரிசாக காரை தட்டிச் சென்ற பிரபாகரன்..!!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது முடிந்தது. இதையடுத்து, இன்று காலை முதல் பாலமேடு ஜல்லிக்கட்டு அங்குள்ள மஞ்சள் மலையாற்றில் சிறப்பாக நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது.
10 சுற்றுகள் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்பட்டன. வீரர்கள் 14 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 14 பேர் மற்றும் பார்வையாளர்கள் 9 பேர், காவலர்கள் 3 பேர் என இப்போட்டியில் 40 பேர் காயமடைந்தனர். போட்டியில் பங்கேற்கவுள்ள காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டிஎஸ்பி விஜயராஜை காளை முட்டியது. முதலுதவி சிகிச்சை மையத்தில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது. பொதும்புவை சேர்ந்த பிரபாகரன் 14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்து காரை பரிசாக வென்றார். புதுக்கோட்டை ராக்கெட் சின்னகருப்பு காளை தேர்வாகி காரை பரிசாக வென்றது. சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் 11 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தையும், 8 காளைகளை பிடித்த கொந்தகை பாண்டீஸ்வரன் மூன்றாம் இடத்தையும் பிடித்தார்.