பாகிஸ்தான்: அரசு ரகசியங்கள் கசிய விட்ட வழக்கு.! இம்ரான் கான், ஷா மஹ்மூத் குரேஷிக்கு '10' ஆண்டுகள் சிறை.!
பாகிஸ்தான் நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசு ரகசியங்களை வெளியிட்டது தொடர்பான குற்றச்சாட்டில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு 10 வருட சிறை தண்டனை வழங்கி பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது.
அரசு ரகசியங்களை வெளியிட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் இம்ரான் கான் மற்றும் குரேஷிக்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் பாகிஸ்தான் பொது தேர்தலுக்கு ஒன்பது நாட்களுக்கு முன்பாக முன்னாள் பிரதமர் மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது. பாகிஸ்தான் அரசியலமைப்பின் அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தின் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி இருவரும் ராவல் பிண்டி நகரில் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருந்து அரசின் ராஜதந்திர நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் சைஃபர் என்ற தொலைத் தொடர்பு சாதனம் மூலமாக பெறப்பட்ட தகவல்களை வெளியிட்டதாக இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது .
.
மேலும் இம்ரான் கானின் பாதுகாப்பில் இருந்த சைஃபர் என்ற மறைகுறியீட்டுக் கருவி காணாமல் போயிருக்கிறது. அந்தக் கருவியை பயன்படுத்தி தங்களது அரசாங்கத்தை கலைக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருவதாக இம்ரான் கான் தெரிவித்து இருந்தார். எனினும் அவரது வாதங்களை மறுத்த நீதிமன்றம் அவருக்கும் முன்னால் வெளியுறவுத்துறை அமைச்சிருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்புக்கு முன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருந்த இம்ரான் கான் " இது ஒரு வேடிக்கையான வழக்கு என குறிப்பிட்டு இருந்தார். மேலும் முறையான விசாரணை இன்றி மேட்ச் பிக்சிங் செய்யப்பட்ட விளையாட்டை போன்று இந்த வழக்கு நடைபெற்ற தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த வழக்கில் என்ன தீர்ப்பு வரும் என்று எனக்கு முன்னரே தெரியும் எனவும் அவர் கூறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது
பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பின் மூலம் இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது பதவி நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து 150 க்கும் மேற்பட்ட வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.