"முன்னாள் பிரதமருக்கு அடி மேல் அடி.." மோசடி வழக்கில் இம்ரான் கான், மனைவி புஷ்ரா பீபிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை.!
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு கடுமையான சோதனை காலம் நிலை வருகிறது. அரசு ரகசியங்களை கசிய விட்ட வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில் மற்றொரு வழக்கில் இம்ரான் கானுக்கும் அவரது மூன்றாவது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு 14 வருடங்கள் சிறை தண்டனை வழங்கி இன்று தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.
பாகிஸ்தானின் தேசிய பொறுப்புடைமை பணியகம் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி மீது புதிய வழக்கு ஒன்றை கடந்த மாதம் பதிவு செய்திருந்தது. அந்த வழக்கில் சவுதி பட்டத்து இளவரசரிடம் இருந்து பெறப்பட்ட பரிசினை அதன் மதிப்பை விட குறைவாக மதிப்பிட்டு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று வெளியாகி இருக்கிறது.
இந்த வழக்கு விசாரணை இம்ரான் கான் சிறை வைக்கப்பட்டிருக்கும் ராவல்பிண்டியின் அடியாலா சிறை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி முகமது பஷீர் இம்ரான் கான் மற்றும் அவரது 3ஆவது மனைவி புஷ்ரா பீபிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். மேலும் 78.7 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு இருக்கிறது. இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 10 வருடங்களுக்கு எந்த அரசு பதவிகள் வகிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் இம்ரான்கானுக்கு நேற்று 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இன்று இத்தீர்ப்பு வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் பொதுத் தேர்தல் வருகின்ற பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இம்ரான் கானின் பிடிஐ கட்சி தனிச் சின்னம் இல்லாமல் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் தேர்தலில் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் இம்ரான் கானுக்கு எதிராக தொடரப்பட்ட 2 வழக்குகளில் அதிரடி தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த இம்ரான் கான் இவற்றில் தனது மனைவிக்கு எந்தவித தொடர்பும் இல்லை அவரை ஏன் இதில் சம்பந்தப் படுத்துகிறீர்கள்.? என உருக்கமுடன் கேட்டுக்கொண்டார். மேலும் 18 கோடி ரூபாய்க்கு பெறப்பட்ட பரிசு பொருட்களை 300 கோடி ரூபாய் என அரசு தரப்பு சித்தரித்து கூறுவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.