வங்கதேசத்திற்கு எதிரான தோல்விக்கு மைதானம் தான் காரணம்..!! - பாக். கேப்டன் ஷான் மசூத்
பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் ராவல்பிண்டியில் நடைபெற்றது.. தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தின் சிறபான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் முகமது ரிஸ்வான் மட்டும் பொறுப்புடன் விளையாடி அணியை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றினார். முடிவில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் 146 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் வங்காளதேசம் வெற்றி பெற வெறும் 30 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரிஸ்வான் 51 ரன்கள் அடித்தார். வங்காளதேசம் தரப்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 4 விக்கெட்டுகளும், ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்காளதேசம் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்காளதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக வங்காளதேசம் வெற்றி பெறுவது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் பேசுகையில், வங்க தேசத்திற்கு எதிரான தோல்விக்கு மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இல்லாததே காரணம். கடந்த 9 நாட்களாக இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் மழை பெய்து வந்தது. அதனால் வேகப்பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் நினைத்தது தவறாகிவிட்டது.
அதேபோல் பவுலிங்கிலும் வங்கதேச அணியை கட்டுப்படுத்த தவறிவிட்டோம். சில தவறான கணிப்புகள் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்த போட்டியில் செய்த தவறுகளை வரும் நாட்களில் சரி செய்வோம். எந்த பிட்சாக இருந்தாலும் ஸ்பின்னருக்கான இடம் அணியில் உள்ளது. ஆமிர் ஜமாலால் பேட்டிங், பவுலிங்கில் பங்களித்திருக்க முடியும். அவரை மிஸ் செய்துவிட்டோம்.
அதேபோல் சிட்னி டெஸ்ட் போட்டியில் சாஜித் கான் சிறப்பாக ஆடினார். அங்கும் 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் விளையாடியது பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த போட்டி எங்களுக்கு மிகப்பெரிய படிப்பினையாக உள்ளது. எங்கள் நாட்டில் உள்ள பிட்சில் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று புரிந்து கொண்டோம். இனி மீண்டும் தவறுகளை செய்யாமல் இருந்தாலே வெல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.