OYO Hotel | இனி திருமணம் ஆகாத ஜோடிகளுக்கு அனுமதி கிடையாது.. செக்-இன் விதிகளின் மாற்றம் கொண்டு வந்த OYO..!!
ஓயோ அறைகள் இப்போது இந்தியாவில் இளைஞர்களால் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான ஹோட்டல்களுடன் ஒப்பிடும்போது OYO அறைகள் குறைந்த வாடகை விகிதத்தில் வழங்கப்படுவதாலும், பாதுகாப்பானது என்ற நம்பிக்கை வருவதாலும், மக்கள் அதிக அளவில் OYO அறைகளை பயன்படுத்துகிறார்கள். OYO நிறுவனத்தை ரித்தேஷ் அகர்வால் 2012 இல் நிறுவினார். இந்த நிறுவனம் தப்போது 80 நாடுகளில் 800 க்கும் மேற்பட்ட நகரங்களில் செயல்படுகிறது. மொத்தமாக சுமார் இந்த நிறுவனத்தில் இருக்கும் ஓட்டல்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.
இந்த நிலையில் OYO புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி திருமணம் ஆகாத தம்பதியினர்க்கு அனுமதி மறுக்கப்படுகிறது. புதிய கொள்கையின்படி, இப்போது அனைத்து தம்பதிகளும் செக்-இன் செய்யும் போது தங்களின் செல்லுபடியாகும் அடையாள அட்டை மற்றும் உறவின் ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் அல்லது நேரடியாக ஹோட்டலில் முன்பதிவு செய்தாலும், தம்பதிகளிடம் இந்த கட்டாய ஆவணங்கள் கேட்கப்படும். உரிய ஆவணங்கள் இல்லாவிட்டால் முன்பதிவுகளை நிராகரிக்கும் உரிமையை OYO அதன் ஹோட்டல்களுக்கு வழங்கியுள்ளது.
இதுகுறித்து OYO வட இந்தியாவின் பிராந்தியத் தலைவர் பவாஸ் சர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூகம் மற்றும் சட்டத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பொறுப்பான மற்றும் பாதுகாப்பான விருந்தோம்பல் சேவைகளை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்., இந்தக் கொள்கையின் தாக்கம் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்படும் என தெரிவித்தார்.
மேலும், இந்த நடவடிக்கை குடும்பங்கள், வணிகங்கள், மதப் பயணிகள் மற்றும் மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் என்று OYO நம்புகிறது. இதனுடன், வாடிக்கையாளர்கள் நீண்ட காலம் தங்குவதற்கும் அடிக்கடி முன்பதிவு செய்வதற்கும் OYO ஐ நம்ப வேண்டும் என்று நிறுவனம் விரும்புகிறது. இந்த முதற்கட்ட முயற்சி மீரட்டில் வெற்றி பெற்றால், மற்ற நகரங்களிலும் அமல்படுத்தலாம் என தெரிவித்தார்.
OYO-வின் இந்த முடிவு சமூகத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இதை ஒரு நேர்மறையான நடவடிக்கையாக கருதுகின்றனர், இது கலாச்சாரத்திற்கும் சமூகத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும். அதே சமயம் இது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் சிலர் கருதுகின்றனர். மற்ற நகரங்களில் இந்தக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுமா இல்லையா என்பதையும் இதன் மூலம் OYO வாடிக்கையாளர் நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ளுமா என்பதையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
Read more ; Breaking…! மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி…!