"அமலாக்கத் துறைக்கு வேலை வைக்க மாட்டோம்.." அண்ணாமலை கருத்துக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி.!
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் அமலாக்கத்துறை குறித்த பேச்சுக்கு தனது வழக்கமான நகைச்சுவையின் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார் அமைச்சர் துரைமுருகன். கடந்த சில மாதங்களாக அமலாக்க துறையினர் திமுக அரசின் அமைச்சர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். திமுக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
தற்போது செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார் இந்நிலையில் வேலூர் தொகுதி எம்எல்ஏவும் அமைச்சர் துரைமுருகனின் மகனுமான டி.எம் கதிர் ஆனந்த் வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வருவதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்தார். மேலும் வேலூர் எம்எல்ஏ-வின் வீட்டு கதவை அமலாக்கத்துறை தட்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன் அமலாக்கத் துறைக்கு நாங்கள் எப்போதுமே வேலை கொடுக்க மாட்டோம் என தெரிவித்திருக்கிறார். மேலும் தங்களது வீட்டின் கதவு எப்போதும் திறந்திருக்கும் எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர் அமலாக்கத்துறை எப்போது வேண்டுமானாலும் வரலாம் என பதிலடி கொடுத்திருக்கிறார். மேலும் கூட்டணி குறித்து பத்திரிக்கையாளர்கள் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு முடிந்ததும் அதனை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவித்தார்.