ஆஸ்கர் விருதுக்கு தேர்வான '2018'!… தென் அமெரிக்காவில் 400 திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது!
இந்திய சினிமாவிற்கு ஒரு வரலாற்று தருணம் என்று கூறப்படும், மலையாள சர்வைவல் த்ரில்லர் 2018 என்ற திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியுள்ள நிலையில், தென் அமெரிக்காவில் 400 திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
டொவினோ தாமஸ் நடிப்பில் இ ந்த ஆண்டு ’2018’என்ற படம் வெளியானது. இந்த படம் ஒரு சர்வைவல் ட்ராமா திரைப்படமாகும். 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. இந்த படத்தை ஜூட் ஆந்தனி ஜோசப் இயக்கி இருக்கிறார்.படத்தில் தன்வி ராம், கலையரசன், அபர்ணா பாலமுரளி, வினித் ஸ்ரீனிவாசன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த ஆண்டு மே 5 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான 2018 படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இதுவரை கேரளாவில் எந்த படமும் வசூலிக்காத ரூ.200 கோடியை வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில் மலையாளத்தில் தயாரான இந்த படம் இந்தியா சார்பில் ஆஸ்கார் விருது போட்டிக்கு தேர்வாகி உள்ளது. இந்தநிலையில், இந்த திரைப்படம் தென் அமெரிக்காவில் 400 திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர் வேணு குன்னப்பிள்ளி, தென் அமெரிக்காவில் முதல் இந்திய திரையரங்கு வெளியீடு குறித்து உற்சாகமாக இருப்பதாக கூறினார். துபாயை தளமாகக் கொண்ட ஏரீஸ் குழுமத்தின் திரைப்பட விற்பனைப் பிரிவான Indiewood Distribution Network சார்பில் தென் அமெரிக்காவில் இப்படம் திரையிடப்படவுள்ளது.
இதுமட்டுமல்லாமல், லத்தீன் மொழிகளில் லத்தீன் அமெரிக்காவுக்கான திரையரங்கு உரிமைகள் விற்பனை செய்யப்படுவதை அவர் உறுதிப்படுத்தினார். மேலும் இதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. உலகளாவிய பார்வையாளர்களிடமிருந்து எங்களுக்குக் கிடைக்கும் அன்பிலும் ஆதரவிலும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். லத்தீன் அமெரிக்காவில் 2018 வெளியாவதென்பது இந்திய சினிமாவுக்கே ஒரு மைல்கல்லாக இருக்கும் என்பதை அறிவது நம்பமுடியாதது என்று தயாரிப்பாளர் வேணு குன்னப்பிள்ளி கூறியுள்ளார். மேலும், “கலாச்சாரத்தைத் தவிர்த்து, பார்வையாளர்களை ஊக்குவிக்கும் ஒரு சமூகச் செய்தியையும் இப்படம் தருகிறது. இது தென் அமெரிக்க பார்வையாளர்களின் இதயங்களில் நுழையும் என்று நான் நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.