நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட ஊழியர்களை நிறுவனங்கள் ஆதரிப்பதில்லை!… ஆய்வில் தகவல்!
நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட ஊழியர்களில் 85% பேர், தங்கள் நிறுவனங்களால் ஆதரிக்கப்படுவதில்லை என்று காப்பீட்டுத் தொழில்நுட்ப நிறுவனமான ப்ளமின் 'ஹெல்த் ரிப்போர்ட் ஆஃப் கார்ப்பரேட் இந்தியா ஆய்வில் தெரிவித்துள்ளது. இதுதவிர, ஐந்து சதவீதத்திற்கும் குறைவான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு காப்பீடு உள்ளிட்ட விரிவான சுகாதார உதவிகளை வழங்குகின்றன. 51 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களில் 50 சதவீதம் பேர் முதலாளிகளால் வழங்கப்படும் சுகாதாரத் திட்டங்களை ஏற்றுக்கொண்டாலும், 20-30 வயதுக்குட்பட்ட 25 சதவீத இளைஞர்கள் மட்டுமே நிறுவனங்கள் வழங்கும் சுகாதார உதவிகளை பின்பற்றிவருகின்றனர்.
இந்த அறிக்கையின்படி, மெட்ரோ அல்லாத நகரங்களில் அனைத்து டெலி ஹெல்த் ஆலோசனைகளில் கிட்டத்தட்ட 1/3 (30 சதவீதம்) ஆலோசனைகள் நடத்தப்பட்டன. டெலிஹெல்த் என்பது, நிறுவனங்களில் பணிபுரிபவர்களை பரிசோதித்து பின்னர் சரியான மருந்துகளை பரிந்துரைப்பது ஆகும். அந்தவகையில், 12 சதவீத நிறுவனங்கள் மட்டுமே தங்கள் ஊழியர்களுக்கு டெலிஹெல்த் ஆதரவை வழங்குகின்றன. அதன் ஒருபகுதியாக, மென்பொருள் நிறுவனமான Chargebee அதன் ஊழியர்களுக்கு டெலிஹெல்த் வழங்குகிறது.
இருப்பினும், 30 சதவீதத்திற்கும் குறைவான பணியாளர்கள் நிறுவனம் வழங்கும் நல்வாழ்வு மையங்களில் பங்கேற்று மருத்துவ உதவிகளை கொள்கின்றனர். 71 சதவீதம் பேர் தங்களது சொந்த செலவில் சுகாதார பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது ஆண்டு வருமானத்தில் சராசரியாக ஐந்து சதவீதம் வரை ஆகும். வெறும் எட்டு சதவிகிதம் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்ட மருந்துகளைப் பெறுகிறார்கள் மற்றும் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான பணியாளர்கள் பார்வைப் பரிசோதனையைப் பெறுகிறார்கள்.
59 சதவீத ஊழியர்கள் வருடாந்திர சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறார்கள், அதே நேரத்தில் 90 சதவீதத்தினர் தங்கள் உடல்நிலையை கண்காணிக்க மருத்துவர்களை சந்திப்பதில்லை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. தடுப்பு சுகாதார நடவடிக்கைகளின் இந்த புறக்கணிப்பு தனிப்பட்ட நல்வாழ்வு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் ஆகிய இரண்டிற்கும் நீண்டகால தாக்கங்களைக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.