OPS | ’வசமாக சிக்கிய ஓபிஎஸ்’..!! ’வழக்கை விசாரிக்க தடை விதிக்க முடியாது’..!! சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்து குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2001-2006ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.72 கோடி சொத்து சேர்த்ததாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஓபிஎஸ், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ஓ.பி.ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு மற்றும் சகோதரர்கள் ஆகியோர் மீது தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
கடந்த 2006ஆம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சிவகங்கை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2012இல் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது. இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் கீழமை நீதிமன்றம் விடுவித்ததை மறு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் சென்னை உயர்நீதிமன்றத்தின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என கூறி ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக திமுக அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோரின் சொத்துக் குவிப்பு வழக்குகளில் கீழமை நீதிமன்றங்கள் விடுதலை செய்திருந்தன. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாமாக முன்வந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.