அதிமுக என்ற அடையாளத்தை இழந்த ஓபிஎஸ்..!! தனிக்கட்சி தொடங்குகிறாரா..? வெளியான பரபரப்பு தகவல்..!!
அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2021ஆம் ஆண்டு நீக்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வானார். தற்போது அதிமுக எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று கூறி அறிக்கைகளை ஓபிஎஸ் வெளியிட்டு வந்தார். இதையடுத்து அதிமுக பெயர், கொடி, லெட்டர் பேடு மற்றும் இரட்டை இலை சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் இபிஎஸ் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அதிமுக கொடி, பெயர், இரட்டை இலை சின்னம், லெட்டர் பேட்டை ஓபிஎஸ் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் அதிமுகவின் பெயர், கரை வேட்டி ஆகியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்த முடியாமல் போனது. எனினும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் ஓபிஎஸ் செயல்பட்டு வந்தார். இவ்வழக்கில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி சதீஷ் குமார், அதிமுக பெயர், கொடி, சின்னம், லேட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நிரந்தரம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார். இதன்மூலம் அதிமுக என்கிற அடையாளத்தை ஓபிஎஸ் இழந்துள்ளார். இது தேர்தலில் மட்டுமல்ல, ஓபிஎஸ்ஸின் அரசியல் வாழ்க்கைக்கே மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சித் தொடங்குவாரா? இல்லையென்றால், தனது ஆதரவாளர்களுடன் மாற்றுக்கட்சியில் ஐக்கியமாவாரா? போன்ற பல கேள்விகள் எழத் தொடங்கி இருக்கிறது. இதற்கிடையே, தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “வரும் மக்களவைத் தேர்தலில் வேட்புமனுவில் அதிமுக வேட்பாளரை அங்கீகரித்தும், சின்னத்தை அங்கீகரித்தும் கையெழுத்திட எனக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அல்லது அதிமுகவின் இரு அணிகளையும் பொதுச் சின்னத்தில் போட்டியிட உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். இதனை தேர்தல் ஆணையம் விரைவில் பரிசீலித்து உத்தரவுகளை பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : தேர்தல் விதிகளை மீறிய பிரேமலதா விஜயகாந்த்..!! காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்..!!