"மணல் கொள்ளை" ஆட்சியில் ‘மண்ணுயிர் காப்போம்’ திட்டமா..? ஸ்டாலின் அரசு மீது ஓபிஎஸ் விமர்சனம்...!
மணல் கொள்ளை’ ஆட்சியில் ‘மண்ணுயிர் காப்போம்’ திட்டமா? என ஓபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “முதனிலைத் தொழிலாக விளங்கும் வேளாண் தொழிலை வளர்ச்சி அடையச் செய்வதற்கும், உணவு தானிய உற்பத்தியை பெருக்குவதற்கும், உணவு தந்துதவும் உழவர்களின் வாழ்க்கைத் தரத்தினை முன்னேற்றுவதற்கும் தேவையான திட்டங்களை உள்ளடக்கியதாக வேளாண்மை நிதி நிலை அறிக்கை அமையும் என்று விவசாயிகள் எதிர்பார்த்த நிலையில், இன்று தமிழக சட்டமன்றப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 2024-2025 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை விவசாயிகளிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேளாண்மைக்கென்று தனி நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது என்ற பெருமையைத் தவிர, இந்த நிதிநிலை அறிக்கையால் பயனேதும் இல்லை என்று விவசாயப் பெருங்குடி மக்கள் தெரிவிக்கின்றனர். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், வாழை, மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு, பருப்பு வகைகள் உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால், இது குறித்து எவ்விதமான அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.
தமிழகம் முழுவதும் உள்ள தென்னை விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தென்னை மரத்திலிருந்து 'நீரா' போன்ற பதநீர் இறக்கி விற்பனை செய்ய ஊக்குவிக்கப்படும் என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து ஏதும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது தென்னை விவசாயிகளிடையே பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாயாக உயர்த்தித் தரப்படும் என்றும், கரும்புக்கான ஆதார விலை டன் ஒன்றிற்கு 4,000 ரூபாயாக உயர்த்தித் தரப்படும் என்றும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என்று விவசாயிகள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்களுக்கு கிடைத்தது வெறும் ஏமாற்றமே என தெரிவித்துள்ளார்.