ஐப்பசி மாத பூஜை.. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 16-ஆம் தேதி திறப்பு..!! - ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்
தென்னிந்தியாவில் மிகவும் பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்றாக சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கேரளா மட்டுமின்றி தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் மாலை அணிந்து விரதம் கடைபிடித்து கோவிலுக்கு வருவது வழக்கம். கொரோனாவுக்கு பின்பு கோவிலில் பக்தர்கள் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
கூட்டத்தின் போது, முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே இந்த ஆண்டு கோவிலில் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும். முன்பதிவு செய்யும் போதே பக்தர்கள் தங்களுக்கான பாதையை தேர்வு செய்து கொள்ளும் வகையில் வசதி செய்து கொடுக்கப்படும். இதனால் அதிகப்படியான கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும். மேலும் நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. இதனிடையே பக்தர்களின் வசதிக்காக சாலையை சீரமைப்பது, பக்தர்களுக்கு தேவையான இடங்களில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி செய்து கொடுப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு சபரிமலை ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அக்.16-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி திறந்து வைக்கிறார். அக்டோபர் 17 -ஆம் தேதி முதல் 21 -ஆம் தேதி வரை 5 நாட்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம் மற்றும் கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறுகிறது. 21 -ஆம் தேதி அத்தாழ பூஜைக்கு பின்னர் ஹரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு கோயில் நடை அடைக்கப்படும். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Read more ; இரக்கம் காட்டாத இஸ்ரேல்!. வான்வழித் தாக்குதலில் 22 பேர் பலி!. 117 படுகாயம்!