’துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் மட்டுமே அணிய வேண்டும்’..!! ஆடை கட்டுப்பாடு விதித்த கன்னியாகுமரி ஆட்சியர்..!!
கன்னியாகுமரியில் அரசு பெண் ஊழியர்கள் சேலை அல்லது 'துப்பட்டாவுடன்' கூடிய சுடிதார் மட்டுமே அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உணவு, ஆடை என்பது குடிமக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. அப்படி இருக்கையில் பல்வேறு இடங்களில் ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதை எதிர்த்து தொடர்ந்து குரல் எழுப்பப்படும்போது அந்த கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பெண் ஊழியர்கள் சேலை அல்லது துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் மட்டுமே அணிய வேண்டும் என ஆடை கட்டுப்பாடு விதித்து ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணிபுரியும் ஜீப் ஓட்டுநர்கள் அலுவலக பணி நேரத்தில் வெள்ளை சட்டை, காக்கி நீளக்கால் சட்டை அணியவும் மற்றும் அலுவலக உதவியாளர்கள் ஆண்கள் வெள்ளை சட்டை, வெள்ளை நீளக்கால் சட்டையும் பெண்கள் மெரூன் கலர் சேலை அல்லது மெரூன் கலர் துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்து பணி செய்ய வேண்டும் (லெக்கின்ஸ் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்) எனவும் இதனை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
இதர அலுவலர்கள் பணி நேரத்தில் நடைமுறையின் படி நேர்த்தியான ஆடைகள் (ஆண் பணியாளர்கள் பேன்ட் சர்ட் மற்றும் பெண் பணியாளர்கள் சேலைகள் மற்றும் துப்பட்டாவுடன் கூடிய சுடிதார்கள்) அணிந்து அலுவலகத்திற்கு வருகை தருவதை உறுதி செய்ய வேண்டும். ஆண் பணியாளர்கள் ஜீன்ஸ் பேன்ட், டிராக் சூட் பேன்ட் போன்ற ஆடைகள் அணிவதையும், பெண் பணியாளர்கள் பேஷன் ஆடைகள் லெக்கின்ஸ் போன்ற ஆடைகள் அணிவதையும் கண்டிப்பாக தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.