ஆன்லைன் செயலி அராஜகம்... புகைப்படத்தை நிர்வாணமாக்கி மிரட்டியதால் இளைஞர் விபரீத முடிவு...
சென்னையில் ஆன்லைன் செயலில் வாங்கிய கடனை முழுவதையும் திருப்பி செலுத்திய பிறகும் மிரட்டியதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் பெறும் மோகம் அதிகரித்த வண்ணாம் உள்ளது. எவ்வித ஆவணங்களும் இன்றி சில நிமிடங்களிலேயே பணம் கிடைத்துவிடுவதால் இதனை பலரும் விரும்புகின்றனர். உடனடியாக கடன் பெற்று விடலாம் என்பதால் அதன் பின் விளைவுகளை அறியாமல் சிலர் செயலி மூலம் கடன் பெற்று விடுகின்றனர்.
அந்த வகையில், சென்னை புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவர் ஆன்லைன் மொபைல் கடன் செயலி மூலம் 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி உள்ளார். இதனை அடுத்து, வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதற்கு நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் கோபி கடன் வாங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆன்லைன் மொபைல் கடன் செயலி மூலம் வாங்கிய கடனை உடனடியாக அடைக்க வேண்டுமென அச்செயலி நிர்வாகிகள் கோபிக்கு அழுத்தும் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கோபி தான் பெற்ற 30 ஆயிரம் ரூபாய் கடனை வட்டியுடன் செலுத்தியதாக சொல்லப்படுகிறது.
வாங்கிய கடனை செலுத்திய பிறகும், கோபிக்கு செயலி நிறுவனம் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அவரது புகைப்படத்தை நிர்வாணப்படுத்தி ஆபாசமாக சித்தரித்து, அவரது தொலைபேசியில் உள்ள எண்களுக்கு நிறுவனத்தினர் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு உள்ளான கோபி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இது குறித்த முழு விவரத்தையும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.