வாவ்...! ஓர் ஆண்டு பயிற்சி+ மாதம் ரூ.4,000 உதவித்தொகை...! ஜூன் 23-ம் விண்ணப்பிக்க இறுதி நாள்...!
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் மாதம் ரூ.4000 உதவித் தொகையுடன் ஓராண்டு பயிற்சி வகுப்பு பெற விண்ணப்பிக்கலாம்.
திருக்கோயில்களில் சமூக நீதியை நிலைநாட்டவும், இறைவனுக்கு ஆற்றும் சேவையில் அனைவருக்கும் சம வாய்ப்பினை உறுதி செய்யும் வகையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உணவு, சீருடை, உறைவிட வசதிகளுடன் கட்டணமில்லாமல் பயிற்சியும், ஊக்கத் தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூ.4,000 மற்றும் பகுதி நேரத்தில் பயிலும் மாணவர்களுக்கு மாத ஊக்கத்தொகை ரூ. 1500 வழங்கப்படுகிறது.
அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் சேர வயது வரம்பு 13 முதல் 24 வயதுக்குள்ளும், ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் சேர வயது வரம்பு 13 முதல் 20 வயதுக்குள்ளும், தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளியில் சேர வயது வரம்பு 13 முதல் 16 வயதுக்குள்ளும் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வேத ஆகம பாடசாலையில் சேர வயது வரம்பு 12 முதல் 16 வயதுக்குள்ளும் மற்றும் பிரபந்த விண்ணப்பர் பயிற்சிப் பள்ளியில் சேர வயது வரம்பு 8 முதல் 18 வயதுக்குள் இருப்பதோடு 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழில் எழுத, படிக்க தெரிந்தவராகவும் இருத்தல் வேண்டும்.
மாணவர் சேர்க்கைக்கான படிவங்களை அந்தந்த திருக்கோயில்களின் அலுவலகத்தில் அலுவலக வேலை நேரத்தில் நேரிலோ அல்லது அந்தந்த திருக்கோயில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு https://hrce.tn.gov.in என்ற துறையின் இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம். இப்பயிற்சி பள்ளிகளில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் ஜூன் 23-ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.