அரசு ஊழியர்களின் ஒருநாள் சம்பளம் பிடித்தம்..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய உத்தரவு..!!
வெள்ள நிவாரண தொகை வழங்குவது தொடர்பாக, அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.
புயல் காரணமாக மழை வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு 4 மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வெள்ள நிவாரண பணிகளுக்காக, அரசு அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள், தங்களின் ஊதியத்தை அளிக்க எழுத்துபூர்வமாக விருப்பம் தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தற்போது உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான உத்தரவில், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியத்தை, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க, பல்வேறு பணியாளர் சங்கங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.
இதனை ஏற்று, டிசம்பர் அல்லது ஜனவரி மாத ஊதியத்தில் பிடித்தம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தங்களின் ஒரு நாள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கான ஊதியத்தை வழங்க விரும்பும் அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள், தங்கள் விருப்பத்தை, சம்பந்தப்பட்ட அலுவலரிடம் எழுத்துபூர்வமாக அளிக்க வேண்டும். பிடித்தம் மேற்கொள்ளப்படும் மாதத்தின் மொத்த ஊதியத்தை அடிப்படையாக வைத்து, ஒரு நாள் ஊதியம் கணக்கிடப்பட வேண்டும்.
பணியாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கான வங்கி சேமிப்பு கணக்கில், மின்னணு முறை வழியாக ஊதிய நாளன்று நேரடியாக செலுத்தப்பட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசு மானியம் பெறும் நிறுவன பணியாளர்களுக்கும், தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் இவ்வாணை பொருந்தும்" என்று அரசு அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.