'ஒரே நாடு, ஒரே தேர்தல்'!. அமைச்சரவையில் அறிக்கை தாக்கல் செய்ய சட்ட அமைச்சகம் திட்டம்!
One Nation, One Election: ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பான முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் அறிக்கையை மத்திய அமைச்சரவையின் முன் "விரைவில்" வைக்க சட்ட அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற உயர்மட்டக் குழு, தனது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் மார்ச் 15ஆம் தேதி சமர்ப்பித்து, மக்களவை, மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பரிந்துரைத்தது. தன்பின் மக்களவை தேர்தல் நடந்து முடிந்து பிரதமர் மோடி தொடர்ந்து 3வது முறையாக பதவி ஏற்றுள்ளார்.
இந்த நிலையில் மோடியின் 100 நாள் செயல் திட்ட அடிப்படையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான அறிக்கையை மிகவிரைவில் ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் வைத்து விவாதித்து முடிவு எடுக்கவும், அதன் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கு வசதியாக சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளவும் சட்ட அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் ராம்நாத் கோவிந்த் குழு வழங்கிய பரிந்துரைகளை நிறைவேற்றுவது குறித்து ஆராய்வதற்காக அமல்படுத்தும் குழுவை அமைக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.