இனி சிலிண்டருக்கு வேலை இல்ல!! குழாய் மூலம் கேஸ் விநியோகம் - மக்கள் ஆர்வம்
குழாய் மூலம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு விநியோகம் செய்வதற்காக, தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளதாக, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்கா, ரஷ்யா போன்ற மேற்கத்திய நாடுகளிலும், ஐரோப்பாவிலும் 'பைப் லைன்' எனப்படும், குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல், நிலக்கரி, எல்.பி.ஜி., எரிவாயு ஆகியவற்றுக்கு மாற்றாக இயற்கை எரிவாயு கேஸ் அங்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த இயற்கை எரிவாயு சுற்றுச்சூழலை பாதிக்காது என்பதுடன் மற்ற எரிபொருளுடன் ஒப்பிடும் போது செலவும் குறைவு என்பதால் வளர்ந்த நாடுகள் இந்த திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன.
இந்தியாவில் குஜராத், கர்நாடகா போன்ற சில மாநிலங்களில் உள்ள பகுதிகளில் வீடுகளுக்கு குழாய் வழித் தடத்தில் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்படுகிறது. இது எல்பிஜி சமையல் எரிவாயு உடன் ஒப்பிடும் போது செலவு 20 சதவீதம் குறைவு ஆகும். சுற்றுச்சூழலையும் பெரிதாக பாதிக்காது. இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த பொதுத்துறை நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன
தமிழகத்தில் குழாய் வழித் தடத்தில் இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில், எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் எல்என்ஜி எனப்படும் திரவ நிலை இயற்கை எரிவாயு முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு வெளிநாடுகளில் இருந்து கப்பலில் எரிவாயு கொண்டு வரப்படுகிறது. இந்த எரிவாயு, வாகனங்களுக்கு சிஎன்ஜி எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவாகவும், வீடுகளுக்கு பிஎன்ஜி எனப்படும் குழாய் வழித் தடம் மூலமாகவும் விநியோகம் செய்யப்படுகிறது.
பொதுவாக கச்சா எண்ணெயில் இருந்துதான் எல்.பி.ஜி. எனப்படும் சமையல் கேஸ் தயாரிக்கப்பட்டு சிலிண்டர் உருளைகள் மூலம் விநியோகிக்கப்படுகிறது. இது, 100 சதவீதம் இறக்குமதியை சார்ந்திருக்கிறது. ஆனால் இயற்கை எரிவாயு 50 சதவீதம் உள்நாட்டில் கிடைக்கிறது. மீதி 50 சதவீதம் தான் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை வரும் என்கிறார்கள்
தமிழகத்தில் வரும் 2030-க்குள் 2.30 கோடி வீடுகளுக்கும், 2,785 சிஎன்ஜி மையங்கள் மூலமாக வாகனங்களுக்கும் இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட 7 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. சென்னையில் டோரண்ட் நிறுவனம் அரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் 500 வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்து வருகிறது.
மேலும் 6 ஆயிரம் வீடுகள் குழாய் எரிவாயு இணைப்பு பெற பதிவு செய்துள்ளன. தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் வீடுகள் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு பெற எரிவாயு விநியோக நிறுவனங்களிடம் பதிவு செய்துள்ளன. இவ்வாறு பதிவு செய்பவர்களுக்கு பல்வேறு கட்டண சலுகைகளையும் வழங்கி வருவதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
Read more | தினமும் தலைக்கு குளிக்கிறீர்களா?. இந்த அபாயங்கள் ஏற்படும்!. மருத்துவர்கள் எச்சரிக்கை!