அக்.21 புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறப்பு..!! 8 ஆண்டுகளாக ரேஷன் கடைகள் திறக்கப்படாதது ஏன்?
கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் முதல்வராக இருந்த நாராயணசாமி - அப்போதைய ஆளுநர் கிரண்பேடி ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அரசு நிர்வாகத்தின் பல்வேறு விஷயங்களில் ஆளுநர் கிரண்பேடி தலையிட்டார். அப்போது, இலவச அரிசி வழங்குவதற்கு பதிலாக நேரடி பண பரிமாற்ற திட்டத்தை கிரண்பேடி கொண்டு வந்தார். அதன்படி, ரேஷன் கார்டு தாரர்ளுக்கு அவர்களது வங்கிக் கணக்கில், அரிசிக்கான பணத்தை வழங்க உத்தரவிட்டார். சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1,200, மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.600 நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
இந்த நேரடி பணம் வழங்கும் முறையை எதிர்த்து நாராயணசாமி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மாநில அரசு நிதியில் வழங்கப்படும் இலவச அரிசியை தடுக்கக்கூடாது என வழக்கில் குறிப்பிட்டிருந்தார். புதுவை யூனியன் பிரதேசம் என்பதால், மத்திய உள்துறைக்குத்தான் இதில் முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது என்று கூறி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் மேல்முறையீடு வழக்கிலும் இந்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனால், புதுவையில் இலவச அரிசிக்கு பதிலாக கடந்த 7 ஆண்டுகளாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ரேஷன் கடைகள் மூடப்பட்டு கிடக்கின்றன. மீண்டும் ரேஷன் கடைகளை திறந்து இலவச அரிசியோடு, அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் கட்சிகளால் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளை மூடப்பட்டதன் தாக்கம், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எதிரொலித்தது.
இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் ரேஷன் கடைகளை மீண்டும் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரேஷன் கடைகள் திறப்பதை முதலமைச்சர் ரங்கசாமி உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறுகையில், “வருகின்ற 21 தேதி புதுச்சேரியில் உள்ள ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு தீபாவளி பரிசாக 10 கிலோ இலவச அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை வழங்கப்படும்.
தீபாவளி அரிசி சர்க்கரை வழங்கிய பிறகு வழக்கம் போல மஞ்சள் அட்டை தாரர்களுக்கு 10 கிலோ இலவச அரிசியும், சிகப்பு அட்டை தாரர்களுக்கு 20 கிலோ அரிசியும் மாதம்தோறும் வழங்கப்படும். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூபாய் 1000 உயர்த்தி வழங்கப்படும். இந்த தொகை நவம்பர் மாதம் முதல் வழங்கப்படும். இவ்வாறு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
Read more ; சூப்பர் திட்டம்..!! நாளொன்றுக்கு ரூ.83 முதலீடு செய்தால் நீங்கள் எதிர்பார்க்காத ரிட்டன் கிடைக்கும்..!!