நாம் சமையலுக்கு பயன்படுத்தும் வெந்தயத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்களும் நன்மைகளும்.!
நாம் சமையலுக்கு பயன்படுத்தும் வெந்தயத்தில் பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அடங்கியிருக்கின்றன. இவை உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு இதய ஆரோக்கியம் மற்றும் பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் பல்வேறு விதமான நன்மைகளை தருகிறது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
வெந்தயத்தில் புரோட்டின் பொட்டாசியம் நியாசின் அல்கலாய்டு இரும்பு சத்து மற்றும் டையோஸ்ஜெனின் ஆகிய சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. மேலும் இவற்றில் நார்ச்சத்துக்களும் அமினோ அமிலங்களும் நிறைந்திருக்கிறது. வெந்தயத்தில் இருக்கும் பொட்டாசியம் இதயம் மற்றும் இரத்த குழாய்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றில் இருக்கக்கூடிய அமினோ அமிலங்கள் இன்சுலின் சுரப்பை கட்டுப்படுத்துவதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகின்றன.
வெந்தயத்தில் இருக்கக்கூடிய அதிகமான நார்ச்சத்து உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. மேலும் அஜீரணக் கோளாறு வாயு தொல்லை போன்றவை ஏற்படாமலும் உடலை பாதுகாக்கிறது. வெந்தயத்தால் செரிமான மண்டலங்கள் சிறப்பாக செயல்படுகிறது. மேலும் வெந்தயம் நமது உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாக சேர்வதை தடுக்கிறது. தொடர்ந்து வெந்தயம் சாப்பிட்டு வருவதால் உடல் பருமன் பிரச்சனையையும் சரி செய்யலாம்.
வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து பயன்படுத்துவதன் மூலம் உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் இருக்கும் குளிர்ச்சி தன்மை பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை போக்க உதவுகிறது. வெந்தயத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து மலச்சிக்கலுக்கும் நல்ல தீர்வாக இருக்கிறது. தொடர்ந்து வெந்தயத்தை நம் உணவில் பயன்படுத்தி வருவதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.