சென்னை உட்பட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..! மீனவர்களுக்கு எச்சரிக்கை..!
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள சூழலில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளது.
இது நாளை புயலாகவலுப்பெறும். இந்த புயலுக்கு "டானா" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, இந்த டானா புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 25-ந்தேதி அதிகாலை ஒடிசா பூரி-சாகர் தீவு இடையே கரையை கடக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த டானா புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100-120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலினால் தமிழகத்துக்கு நேரடியாக எந்த பாதிப்பும் இருக்காது என்றாலும் கூட, காற்றின் உடைய தாக்கம் கடலோர பகுதிகளில் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, கடலூர், நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் உருவாக்கி வானிலை சுழல் ஏற்பட்டுள்ளது என்பதை குறிக்கும் விதமாக இந்த 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும்.