இனி மாணவர்களின் இல்லத்திற்கு நேரடியாக செல்ல வேண்டும்...! ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு
உயர்கல்வி செல்ல இயலாத மாணவர்களின் இல்லம் சென்று நேரடியாக சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதற்காக நடப்பு கல்வியாண்டில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மற்றும் நடப்பாண்டில் கல்லூரிக்கு விண்ணப்பிக்காத 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய எழுதாத இடைநின்ற மற்றும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மற்றும் பெறாத மாணவர்களுக்குத் தகுந்த உயர்கல்வி ஆலோசனைகள் வழங்க மே 6-ம் தேதி முதல் மே 20-ம் தேதி வரை அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கைக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக உயர்கல்விக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கு உயர்வுக்கு படி முகாம் வருகின்ற 02.09.2024 முதல் 0110.2024 வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது.
இதனையடுத்து 2022-23 மற்றும் 2023-24-ம் கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு பயின்று இதுவரை உயர்கல்வியில் சேராத மாணவர்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று உயர்வுக்கு படி முகாம் தொடர்பான விவரங்களையும் உயர்கல்வி சேருவதற்கான விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதால்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்கள். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆகியோர் நேரடியாக மாணவர்களின் இல்லங்களுக்குச் சென்று உயர்கல்வி செல்லாததற்கான காரணங்களைக் கண்டறிந்து மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை வழங்க உள்ளனர்.
உதவித் திட்ட அலுவலர் பொறுப்புகள்; அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கான கலந்தாலோசனை கூட்டத்தை இணைய வழியில் நடத்தி இக்களப்பணி சார்ந்த வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். இக்களப்பணியில் ஈடுபட வேண்டிய உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்கள். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆகியோரின் விவரங்கள் பள்ளி வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது. இணையவழிக் கூட்டத்தில் இது குறித்தான தகவல்களை அறிவுறுத்த வேண்டும்.
தலைமை ஆசிரியர்களின் பொறுப்புகள்; உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆகியோர்களுக்கு 2022-23 மற்றும் 2023-24ம் கல்வி ஆண்டில் உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்களின் விவரங்களை வழங்க வேண்டும். உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு நடப்பாண்டில் நடைபெற இருக்கும் உயர்வுக்கு படி முகாம் பற்றிய தகவல்களை தெரியபடுத்த வேண்டும்.மேலும் மாணவர்களை உயர்வுக்கு படி முகாமில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும். இது தொடர்பான முழுமையான தகவல்களை மாவட்டம் வட்டாரம் மற்றும் தேதி வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களை இல்லங்களுக்குச் சென்று சந்திக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல் மற்றும் சேகரிக்க வேண்டிய விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சேகரித்த மாணவர்களின் விவரங்கள் தலைமை ஆசிரியர்கள் சேகரித்து அவை அனைத்தையும் EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களின் பொறுப்புகள் மாணவர்களை இல்லங்களுக்குச் சென்று நேரில் சந்திக்கும் போது அவர்களுக்கு உயர்கல்வியில் சேருவதற்கு தேவைகள் அல்லது நடைகள் இருந்தால் அதனைக் கண்டறிந்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.