இனி X தளத்தில் வீடியோ கால் பண்ணலாம்!… ஆண்ட்ராய்டு போன்களிலும் வந்துவிட்டது புதிய வசதி!
ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் X தளத்தில் வீடியோ மற்றும் ஆடியோ கால் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ட்விட்டர் என்றழைக்கப்பட்ட X நிறுவனம் எலான் மஸ்க்கின் கைகளில் மாறியதில் இருந்து பல்வேறு மாற்றங்களுக்கு ஆளாகி வருகிறது. ப்ளூ டிக் வாங்குவதற்கு கட்டணம், ஆட்குறைப்பு, X பெயர் மற்றும் லோகோ மாற்றம், பதிவுகளை போடுவதற்கும், பதிவுகளுக்கு பதில் அளிப்பதற்கும் கட்டணம் (பரிசோதனையில் உள்ளது) என பல மாற்றங்களை கண்டுள்ளது.
மேலும், X தளத்தை ஒரு அனைத்து சேவைக்களுக்குமான தளமாக மாற்றுவதை எலான் மஸ்க் நோக்கமாக கொண்டிருக்கிறார். எனவே, X தளத்திலேயே பண பரிமாற்றம், வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகள் மேற்கொள்வது போன்ற வசதிகள் கொண்டு வரப்படும் என கூறப்பட்டது. அந்த வகையில், X தளம் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான சேவையை அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பு iOS-இல் மட்டும் கிடைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆண்ட்ராய்டு போன்களுக்கும் இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பை பிரீமியம் பயனர்கள் மட்டுமே மற்றவர்களுக்கு அழைக்க முடியும். மற்ற பயனர்கள் அழைப்பை பெற முடியுமே தவிர ஏற்படுத்த முடியாது. எக்ஸ் தளத்தை அப்டேட் செய்வதன் மூலம் இந்த சேவையை பெற முடியும். இதன் மூலம் பிரீமியம் வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
X தளத்தில் ஆடியோ அல்லது வீடியோ அழைப்பை எப்படி செய்வது? Envelope (மெசேஜ்) ஐகானை கிளிக் செய்யவும். உங்கள் மெசேஜ் பக்கம் திறக்கும். ஏற்கனவே உள்ள மெசேஜ் உரையாடலில் கிளிக் செய்யவும் அல்லது புதிய உரையாடலைத் தொடங்கவும். தொலைபேசி ஐகானை கிளிக் செய்யவும். அப்போது உங்களுக்கு ஆடியோ மற்றும் வீடியோ ஆப்ஷன் தெரியும். ஆடியோ அழைப்பைத் தொடங்க Audio Call ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
வீடியோ அழைப்பைத் தொடங்க Video Call ஆப்ஷனை கிளிக் செய்யவும். நீங்கள் அழைக்கும் கணக்கு நீங்கள் அவர்களை அழைக்கிறீர்கள் என்ற அறிவிப்பைப் பெறும், மேலும் அவர்கள் எடுக்கவில்லை என்றால் அவர்கள் மிஸ்டுகால் அறிவிப்பைப் பெறுவார்கள்.