UPI பேமெண்ட்... மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!
இந்தியாவில் மக்கள் பலர் ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்த தொடங்கியது முதல் அனைத்து சேவைகளும் சுலபமாகிவிட்டது. மேலும் எந்த இடத்தில் இருந்தும் போன் மூலமாக நமக்கு பிடித்த பொருள்களை கூகுள்பே, பேடியெம், போன் பே போன்ற செயலிகளை பயன்படுத்தி வாங்கி கொள்ளலாம். இது எந்த அளவுக்கு எளிமையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு பிரச்சனையும் வருகிறது. அதாவது ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலமாக மோசடிகள் நடைபெறுகிறது.
UPI செயலிகள் மூலமாக நாம் அடுத்தவர்களுக்கு பணம் அனுப்பும் போது அதன் மூலம் பெரும்பாலும் மோசடி நடைபெறுகிறது. மேலும் பணம் அனுப்பும் போது பின் நம்பர் உள்ளிட்ட ரகசிய விவரங்களை நாம் பாதுகாப்பாக வைக்காமல் இருக்கிறோம். அதனால் ஏகப்பட்ட சிக்கல் வருகிறது. அதே போல க்யூஆர் ஸே்கேன் செய்து மற்றவர்களுக்கு பணம் அனுப்பும் முறை மூலம் அதிகமான மோசடி நடைபெறுகிறது. அப்படி நாம் செய்வதால் நம்முடைய வங்கி விவரங்கள் ஹேக் செய்ய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதனால் UPI பரிவர்த்தனை செய்யும் போது நாம் கவனமாக இருக்க வேண்டும். மேலும் வங்கி கணக்கு குறித்த விவரங்களை மற்றவர்களுக்கு பகிர்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அரசும் அவ்வபோது அறிவுறுத்தி வருகிறது.
உதாரணத்திற்காக, மோசடி செய்பவர்கள், UPI மூலம் உங்களுக்கு ஒரு சிறு தொகையை அனுப்பி, அதனை திரும்பச் செலுத்த சொல்லலாம். அதற்காக ஒரு லிங்கை அனுப்பலாம். இது போன்ற லிங்குகளை கிளிக் செய்வதால், நம்முடைய வங்கி கணக்கில் இருக்கும் பணம் பறிக்கப்படுகிறது. எனவே, இது போன்ற ஆள் பெயர் தெரியாத நபர்கள், ஏதேனும் பிற லிங்குகளை அனுப்பி, அதன் மூலம் பணம் அனுப்பச் சொன்னால், அதனை நிராகரித்து விடுங்கள்.
வங்கிகளில் இருந்து பேசுவதாகக் கூறி UPI ஐடி, UPI பின் மற்றும் OTP போன்றவற்றை நம்மிடம் பெற்று, அதை வைத்து நம்முடைய வங்கிக் கணக்கில் இருந்து பெரிய அளவிலான தொகை திருடப்படுகிறது. எந்த வங்கியும் உங்களுடைய வங்கி தொடர்பான விவரங்களையும் UPI ஐடி போன்ற விவரங்களையும் கேட்காது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
சில நேரங்களில் உங்களுடைய ஏடிஎம் கார்டு விவரங்கள், டெபிட் கார்டு விவரங்கள் மற்றும் யுபிஐ ஆப்பின் விவரங்கள் போன்றவற்றை திருடி, உங்களுடைய பெயரிலேயே ஜி பே, போன் பே போன்ற செயலிகளைப் பயன்படுத்தி, பணத்தை எடுக்கும் சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் உங்களுடைய வங்கி சார்ந்த விவரங்கள் மற்றும் UPI விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
குறிப்பாக, இந்திய ரிசர்வ் வங்கி, தொலைத்தொடர்பு துறை, அரசு மற்றும் தனியார் வங்கிகள், உங்களிடம் வங்கித் தகவல்கள் மற்றும் UPI தகவல்களைக் கேட்க மாட்டார்கள் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். எந்தவொரு பரிவர்த்தனையையும் செய்வதற்கு முன்பாகவே, பணத்தைப் பெறுபவரின் UPI ஐடியை உறுதிப்படுத்திக்கொள்ளவும். அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பான செயலிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பொது இடங்களில் உள்ள Wi-Fi மூலம் வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டாம்.