”இனி அரசுப் பள்ளி மாணவர்கள் விண்வெளியிலும் ஆட்சி செய்வார்கள்”..!! முதல்வர் முக.ஸ்டாலின் பெருமிதம்..!!
தமிழ்நாட்டு மாணவர்கள் அனைத்து துறைகளிலும் சிறந்தவர்களாக விளங்குவதாகவும், உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் தான் அதிகம் என்றும் முதல்வர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இந்தியாவின் பல்வேறு முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்வி பயிலச் செல்லும் அரசுபொ பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் முக.ஸ்டாலின், ”மாணவர்கள் உயர்ந்தால் ஆசிரியர்களுக்கும், குழந்தைகள் உயர்ந்தால் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்க்கும். தமிழ்நாட்டின் மாணவர்கள் அனைத்து துறைகளிலும் சிறந்தவர்களாக விளங்குகின்றனர்.
குறிப்பாக, அரசுப் பள்ளி மாணவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. தற்போது தமிழ்நாட்டில் இருந்து 54 மாற்றுத்திறனாளி மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. எதிர்கால சொத்துக்களை உருவாக்கி சமூகத்திற்கும் நாட்டிற்கும் அளித்துள்ள ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் நான் பாராட்டுகிறேன்.
ஐஐடி, ஐஐஎம் மட்டுமல்ல, தேசிய சட்டப் பயிற்சி நிலையம், விண்வெளி துறையின் உயர்ந்த கல்வி நிறுவனங்களிலும் தமிழக மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தைவான், மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் 14 தமிழ்நாட்டு மாணவர்கள் முழு கல்வி செலவை இலவசமாக பெற்றுள்ளனர். அந்த மாணவர்களின் முதல் முறை பயணச் செலவை தமிழ்நாடு அரசு ஏற்கும்.
விண்வெளியிலும் அரசு பள்ளி மாணவர்கள் இனி ஆட்சி செலுத்துவார்கள். அறிவாற்றல் இருந்தால் எந்த தடையும் வெல்லலாம். ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் சாரை சாரையாக உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் படிக்கச் செல்கின்றனர். திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு கல்வித்துறை மறுமலர்ச்சி அடைந்துள்ளது” என்றார்.
Read More : மக்களே..!! இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்..!! மீறினால் என்ன நடக்கும் தெரியுமா..?